ஏன் கின்ட்சுகி?

Twitter Id : swethamayuri_s

என் பள்ளி நாட்களில் நடந்த ஓரு சம்பவம். தோழிகளுடன் எனக்கு பிடித்தமான புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். வேடிக்கை பார்க்கத்தான். அந்த கடையில் ஒரு பாதி புத்தகங்கள், மீதி பாதி அலங்காரப் பொருட்கள், பொம்மைகள், எல். ஆர். ஈஸ்வரி ஒலித்தட்டுகள் என வகையும் வண்ணமுமாய் நிரம்பியிருக்கும். சிறிது நேரத்தில் என் விரல்கள் நூல் அறுபட்ட ஹீலியம் பலூன் போல் மூளையுடனானத் தொடர்பைத் துண்டித்து ஒரு விந்தையை நிகழ்த்தியது. தரையில் இரு மூலையிலிருந்தது ஒர் உருவாய் இருக்க வேண்டிய சீன பீங்கான் கோப்பை. 

அன்றும், இன்றும், என்றும் பர்சில் நூறு ரூபாய் இருக்கும். நான் உடைத்த பொருளின் மதிப்பு 60 ரூபாய். கடைக்காரருக்கு வாய்ப்பளிக்காமல் நானே வாங்கி விடுகிறேன் என வாயைவிட, அவ்வழகிய வேலைப்பாடுகள் கொண்ட உடைந்த கோப்பை என்னுடையதாகியது. என் மேசையின் மீது வைத்தாகி விட்டது. அதன் அழகைக் கண்டு வியப்பு ஒரு புறமும், எழிலைக் குலைத்து விட்டேன் என்ற திகைப்பு மறு புறமும் இருக்க, என்னாத்த.. என்று விட்டுவிட்டேன். 500 ஆண்டுகள் முன்னர் இதே திகைப்புக்குள்ளான ஒரு ஜப்பானியத் தளபதி அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக இல்லை.

yoshimasa.jpg

ஜப்பானில் பேரரசருக்குக் கீழ் போர்த்தளபதிகளாக நின்று ஆட்சிபுரிந்தவர்கள் ஷோகுன்கள் என அழைக்கப்பட்டனர். ஆஷிக்காகா யோஷிமசா என்னும் பதினைந்தாம் நூற்றாண்டு ஷோகுனின் பிடித்தமான தேநீர் கோப்பை உடைந்துவிடுகிறது. அதனைப் பழுதுபார்க்கச் சீனாவிற்கு அனுப்பி வைக்கிறார். பெரிய இரும்பு கம்பிகளால் பழுதுபார்க்கப்பட்டு முற்றிலும் தன் நயத்தை இழந்து அவலட்சணமாகத் திரும்பிய கோப்பையைக் கண்டு ஷோகுன் ஏமாற்றமடைகிறார்.  உடனே ஜப்பானியக் கலைஞர்களை நிர்பந்தப்படுத்தி உடைந்த பொருட்களை அதன் கலைநயம் சிதையாமல் பழுதுபார்க்கும் வழியைக் கண்டடைய உத்தரவிடுகிறார். 

கலைஞர்கள் உடைந்த கோப்பையின் வெடிப்புகளை அரக்கு மற்றும் தங்கமுலாம் கொண்டு நிரப்பி, காய வைத்து, தேய்த்து செம்மையாக்கும் ஒரு முறையை உருவாக்குகின்றனர். சரி செய்யப்பட்ட கோப்பைகள் முன்பிருந்த வடிவைக் காட்டிலும் மெருகேறிக் காணப்பட்டதால் இச்செய்முறை தன்னளவில் ஒரு கலையாக மாறி “கின்ட்சுகி” அல்லது  “கின்ட்சுக்கொராய்” என்று அழைக்கப்பட்டது. 

kintsugi21

“கின்ட்சுகி” கலைஞர்கள் உடைந்த இடங்களை மறைக்க முயல்வதில்லை. மாறாக வெடிப்புக்குள்ளான பகுதிகள் மினுங்கவும், மேலும் உறுதி கொள்ளவும் செய்கின்றனர். 

ஆறிய தழும்புகள் பொன்னாலானவை. அவை நம்மை முழுமையாக்கும், வலுப்படுத்தும் என்னும் தத்துவம் சார்ந்த அர்த்ததை “கின்டசுகி” நாளடைவில் பெறுகிறது. 

kintsugi-piatto-blu1

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் என் தந்தை இறந்தார். அவர் பிரிவை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். என் உற்ற தோழன். எனக்குப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தியவர். என்னிடம் அரசியல் விவாதிப்பவர். நான் எழுத்தாளராக வேண்டும் என விருப்பப்பட்டவர். வாழ்க்கையை வினாடி வீதம் நேசித்தவர்.  பன்னிரண்டு ஆண்டுகள் நோயுற்று வலி வேதனையின் பிடியில் தவித்து தன் ஆளுமையை இழந்து வேறொருவராக மறைந்தவர். அவர் நினைவில் திளைத்து தூக்கம் தொலைத்த ஓர் இரவில் கின்ட்சுகியை பற்றி ஒரு YouTube காணொளியைக் கண்டேன். 

“உலகம் அனைவரையும் உடைத்துப் போடும். பின்னர் பலர் உடைபட்ட இடங்களில் வலுவடைகிறார்கள்” என்று அதில் வரும் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் கூற்று மனதை அழுத்தி அழச்செய்தது. குறைபாடுகள் வழியே முழுமையை உணர்தல் என்னும் கிழக்கத்திய தத்துவத்தின் சாயல் இருக்கவே, ஒரு கலை வடிவம் என்பதைத் தாண்டி ஒரு தரிசனம் என்னும் இடத்திற்கு  கின்ட்சுகி வந்துள்ளது.  காயங்கள் முற்றிலும் ஆறிடவில்லை என்றபோதும் எழுத்தைக் கொண்டு என்னை முழுமையாக்கிக் கொள்ள ஒரு முயற்சியே இவ்வலைப்பூ. எனவே… கின்ட்சுகி.

One thought on “ஏன் கின்ட்சுகி?

  1. நெகிழ்ச்சியான பதிவு. உங்கள் நடை உணர்வுபூர்வமாகவும் சரளமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்….

    Like

Leave a reply to Kishore Kumar Cancel reply