முகலாயன் – சிறுகதை

எண்ணங்களாலான ரயில் மிதவேகத்திலிருந்து அபாய நிலைக்குச் சென்று சுமார் எழுபது நிமிடங்களாகிவிட்டிருந்தன. பூண்டைத் துண்டாக்கி  வகிடெடுக்கும் இடத்தில் தேய்த்தால் முடி நன்கு வளரும் என்று காவி உடுத்திய வைத்தியர் நம்பிக்கையளிக்கிறார். நீண்ட பற்களுடன் எங்கிருந்தோ நுழைந்த  ட்ராக்குலா பூண்டைக் கண்டு மிரண்டு அங்கிருந்து நகர்கிறான். நான் ரத்த தானமளித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கி நேரே ஓடி வரும் அவனை இடைமறித்து, என் கணக்கு வாத்தியார் O என அவன் முதுகில் ஒரு முத்திரை போடுகிறார்.  “O பாஸிட்டிவ் ரத்த வகுப்பினர் ஆரஞ்சு பழம் சாப்பிடாதீர்” என்று கூறி மன உளைச்சலை ஏற்படுத்திய டாக்டர், நாற்பது வயதில் இறந்த செய்தித்துடுக்கு காட்சியின் முன்னணியில் ஓடுகிறது. ஆரஞ்சு பழத்தோலை கண்களருகே கசக்கி என்னை ஐந்து நிமிடம் குருடாக்கிய கண்ணன் ஓர் ஓட்டைப்பல் சிரிப்புடன் வெயிலில் நிற்கிறான். “கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல..” என இன்னும் இரும்பாக மாறாத அழகுப்பதுமை தன் தோள்களை மட்டுமே அசைத்து அவனைப் பார்த்து நடனமாடுகிறாள்.

தெரியாமல் பிருஷ்ட்டத்தால் அழுத்தப்பட்டிருக்கும் ரிமோட் பட்டன் போல மனம் சேனல்களை விடாது மாற்றிக்கொண்டே இருந்தது.

இன்றிரவு நித்திரா தேவி என்னை முழுவதும் ஆட்கொள்வாள் என நம்பி கண்களை மூடியிருந்தேன். நூலறுப்பட்ட பாசி மணிகள் போல ஏதேதோ எண்ணங்கள் என் இரவை சிதற விட்டு எட்டுத் திக்கிலும் உருண்டோடின. கனவுகள் அல்ல. காட்சிகள். என் அபோத மனம் என்றோ சேர்த்த நினைவுகளைக் கொண்டு சரியாகத் தொகுக்கப்படாத ஆவணப்படம் ஒன்றைத் திரையிட்டு என்னை வழக்கம் போல தூங்க விடாமல் செய்தது.

“ஆள விட்டுங்கடா” என்னும் தோரணையில் நான் விடுக்கென கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். மணி 1.40 என்று கைப்பேசி காட்டியது. காலையில் நடேசன் எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். புரஃபசர் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவதே திட்டம். எனக்குப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணம் அவர் என் மேஜை மீது கிழிந்த நிலையிலிருக்கும் கணக்கு கைட் எழுதிய முனைவர் கங்காதர் என்பதனால் கூட இருக்கலாம்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரவிற்கும் பொறியியல் கலந்தாய்விற்கு ஏற்ப அமைய, ஒருவித அலட்சியத்துடனே எஞ்சியிருந்த விடுமுறை நாட்களைக் கழித்தேன். பகலில் தூங்கினேன், கணினியில் படம் பார்த்தேன், காந்தி பரிந்துரைப்படி ஒவ்வொரு வாய் உணவையும் முப்பத்திரண்டு தடவை நன்கு மென்று (அவர் பரிந்துரைக்காதபடி) நான்கு வேளை சாப்பிட்டேன்.

நடேசனிற்கு நான் கங்காதரிடம் உரையாடினால் மன எழுச்சி ஏற்பட்டு மாதிரி இளைஞியாக வலம் வருவேன் என்ற எண்ணம். அவர் பேச்சை என்னால் தட்ட முடியாது. பிள்ளை போல் என் பேரில் பாசம் வைத்திருந்தார். அதற்கு ஒருவகையில் என் ஜாதகம் தான் காரணம் என்ற ஐயம் எனக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. ஒரு வருடம் முன், குடும்ப சோதிடரை பார்க்கச் சென்றவர், என்ன நினைத்தாரோ கிளம்பும் முன் அம்மாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டு பெற்றுக் கொண்டார். அதுவரையில் பக்கத்து வீட்டுப் பணக்கார அங்கிள் என்றே எனக்கு அவர் பரிச்சயம். சோதிடர் என்ன கணித்தாரோ தெரியவில்லை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் மினுங்க ஆத்மார்த்தமாய் வாழ்த்த ஆரம்பித்தார்.
“அபார யோகம் உனக்கு இருக்கு. நீ பெரிய ஆளா வருவ பாப்பா. பெரிய பதவி வகிப்ப .நீ எங்க போனாலும் செல்வம் பன்மடங்கா பெருகும்”. என் அம்மாவிடமும் அதே பரவசத்துடன் என் ஜாதகத்தின் பாராம்சம்களாக அவர் நினைப்பதைப் பற்றி சொல்லி என்  அம்மாவையும் பகற்கனவு காணச் செய்தார். “செளமி பாப்பா நிச்சயம் ஃபாரின் செட்டில்…”

அதன் பின் புத்தகங்கள், கலை இலக்கிய இதழ்களுக்கு வருடச் சந்தாக்கள் என நான் அடையப் போகும் உச்சத்திற்கு அவருடைய பங்களிப்பாக கருதும் பொருட்களை தொடர்ந்து வாங்கித்தந்தவாறு இருந்தார். தரும் முன்பு ஒரு வார்த்தை அம்மாவிடம் சொல்லிவிடுவதால்  “எதுக்குங்க இதெல்லாம், வீண் செலவு“ தவிர நடேசன் மீது எந்த வித பெரிய சங்கடமும் எதிர்ப்பும் அம்மாவிடத்தில் இருந்ததில்லை.
***

கண்ணன் இரண்டு முறை நான் கிளம்பி விட்டேனா என்ற தகவலறியும் சாக்கில் அம்மாவிடம் முதல் தடவை க்ரீம் பிஸ்கட்டும் இரண்டாம் முறை தட்டை முறுக்கும் வாய்பேசி வாங்கிச் சாப்பிட்டு விட்டிருந்தான். நான் சரியாக ஒன்பது மணிக்கு  வீட்டு வாசலில் வந்து நின்றேன். நடேசன் காரை வெளியே நிறுத்தி அரை மணி நேரமாவது இருக்கும். கண்ணன் இடது கையில் தட்டை முறுக்கை வைத்துக் கொண்டு வலக் கை விரல்களால் கார் பின்கண்ணாடியில் படிந்த தூசை கலைத்து ஒரு குதிரைப் படையையே(?)  வரைந்திருந்தான். நடேசன் நான் வந்ததை உணர்ந்து கண்ணனின் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார். “இவ்வளவு நேரம் இத கிறுக்கறதுக்கு துணிய வச்சு தூச தொடச்சிருக்கலாம்ல?” அவர் “இவ்வளவு” -இல் கொடுத்த அழுத்தம் கேட்டு சில வினாடி திகைத்து அங்கேயே நின்றேன். அதைப் புரிந்தவராய் “வா மா மின்னனனல்ல்” என்று  என்னை வரவேற்க, ஆறுதலாகவும் பின் சற்று அவமானமாகவும் இருந்தது. “இப்பவாச்சும் வந்தியே ஏறு…”

கண்ணன் அடி வாங்கிய நினைவேதுமின்றி கைகளில் சேர்ந்த தூசை இரண்டு தட்டி தட்டி கார் முன் இருக்கையில் ஒரே பாய்ச்சலில்  ஏறலானான். அவனுடைய அப்பா ஓட்டுநர் இருக்கை வழக்கத்திற்கு மாறாகச் சாய்வாக இருப்பதைக் கண்டு முணுமுணுத்துக் கொண்டே சரி செய்தார். நான் கண்ணனுக்கு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

கார் முதலில் ரிவர்ஸில் செல்ல ஆரம்பித்தது. நடேசன் அணிந்த சட்டை அன்றைய அனுகுலமான நிறத்தில் இல்லை போலும். அந்த காரில் ரிவர்ஸ் கியரும் முதல் கியரும் ஒன்றே. அழுத்தம் சற்று கூடுதலாக செலுத்தியதால் நாங்கள் பின்னோக்கி நகர்ந்தோம். கண்ணனுக்கு இது குதூகலத்தை அளித்தது. அவன் குழந்தைகளுக்கேயுரிய தொண்டையில் ஆரம்பித்து அங்கேயே முடியும் சிரிப்பை சிரித்தான், விக்கல் வருவது போல. எனக்கு ஆரஞ்சு தோல் ஞாபகம் வந்தது. ஒரு வழியாக கார் முன்னே செல்ல ஆரம்பித்தது. அதனுடன் சேர்ந்து என் எண்ணங்களின் வேகமும் மெல்லக் கூடியது.
***

அது ஒரு நீல பூச்சு பூசிய இரண்டு அடுக்கு வீடு. அரை மணி நேரம் முன்பு வரை மழை பேய்ததிற்கான தடையங்கள் தெரிந்தன. அவ்வீட்டின் வெளிச்சுவர் ஆங்காங்கே வெளுத்த நீலமாகவும் உலராத இடங்கள் அடர்ந்த நீலமாகவும் இருந்தது. கீழ்த்தள வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாம் மூடியிருந்தது.

காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்தது போல, நடேசன் அழைப்பு மணி அடிக்கும் ஒரு வினாடி முன்பு கதவுத் திறந்தது. ஒரு சிறுமி முடி தேகமெல்லாம் எண்ணையொழுக சனி நீராடலுக்குத் தயாராகிய நிலையிலிருந்தாள். அம்மா… அம்மா… அம்மா… என்று அவள் கூப்பிட்ட ஒரு அம்மா பல முறை அசிரிரியாக ஒலிக்க, அவ்வீடு எவ்வளவு காலியாக இருந்தது என்று அப்போது தான் உணர்ந்தேன். பெரிய ஹாலில் ஒரு பாயும் கலைஞர் டி.வியும் மட்டும் தான் இருந்தது. வெற்றிடத்தை நிரப்ப ஒரு வயோதிகர் கூட இல்லை. முப்பத்தைந்து வயதுமிக்க ஒரு பெண்மணி சமையலறையிலிருந்து வந்தார். கறுப்பு சுடிதாரில் இட்லி மாவின் திட்டுக்கள். “நல்லாயிருங்கீங்களா?” பதிலுக்குக் காத்திருக்காமல் “ஐயா மேல தான் இருக்கார். போங்க” என்றார்.

கண்ணன் வழி தெரிந்தவனாய் குடுகுடு வென மேலே ஓட அவனைப் பின் தொடர்ந்தோம். நடேசன் “சார்?” என்றழைத்தார். “நடேசனா? தோ வந்துடறேன்” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நாங்களிருந்த அறையில் என் கண்ணுக்குத்  தென்பட்டவையெல்லாம் புத்தகங்கள். டீப்பாயில், நாற்காலியில், தரையில் என எங்கும் பழையதும், புதிதுமாய் புத்தகங்கள், தெய்தித்தாள்கள். டீப்பாய் மீது மட்டும் புத்தகங்கள் அதன் அளவுக்கேற்றவாறு வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.  மற்ற இடங்களில் எல்லாம் குவியலாகவே இருந்தது. நான் கணக்கு புத்தகங்கள் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று நோட்டமிட்டேன். பெரும்பாலும் வரலாறு, தத்துவ, சைவ சித்தாந்த நூல்கள். குவியல்களுக்கு நடுவே ஒரு சிகப்பு அட்டைப் புத்தகம் ஒன்று என் கண்ணில் அகப்பட்டது. நூற்றைம்பது பக்கங்களே கொண்ட மெலிந்த நூல். நூலின் தலைப்பு பெரிய வெள்ளை எழுத்துகளாலும் நூலாசிரியரின் பெயர் மிகச் சிறிய மஞ்சள் எழுத்துகளாலும் அச்சிடப்பட்டிருந்தது.
“முகலாயர்” “வ.கங்காதர்”

அந்தக் குவியலில் ஐந்து பிரதிகளுக்கு மேல் அந்தப் புத்தகம் கிடந்தது எனக்கு சந்தேகத்தை எழுப்பியது. “இது இவரா எழுதினார்?” நடேசன் “ஆமா” என்றார். எனக்கு ஒவ்வாத கணக்கு கைடு எழுதிய Dr. V.கங்காதர் PhD யையும் என் சிறந்த குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றைப் படைத்த வ. கங்காதரையும் என்னால் ஒரே பாத்திரமாக பார்க்க முடியவில்லை. “இத இல்லையா நீங்க முன்னாடி சொல்லியிருக்கனும்?!”

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கிடைத்த சலுகைகளில் ஒன்று பள்ளி நூலகத்தில் இரண்டு வாரத்திற்க்கொருமுறை ஒரு நூல் எடுக்கலாம். நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த புத்தகம்  ஒல்லியாகவும் எனக்குப் பிடித்த நிறத்தில் அதன் அட்டை இருந்ததினாலும் ஸ்டாம்பு அச்சு பெற்று வீட்டிற்கு உற்சாகத்தோடு எடுத்து வந்தேன். படங்கள் எதுவும் இல்லாமல் வாசித்த முதல் புத்தகம் என்பதால் மலைப்பாகயிருந்தது. பின்பு சற்று சிரம் கொண்டு முப்பதுப் பக்கங்களை தாண்டிய பின் முழு வீச்சோடுப் படித்து முடித்தேன். முகலாய அரசர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புனைவாக எழுதப்பட்டிருந்த சிறுகதைத் தொகுப்பது. நான் வாசிக்கையில் அம்மா பாதாமையும் ஏலக்காயையும் அரைத்து பாலில் கலந்துக்கொடுக்க, வாசமும் சொற்களும் ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டு என் நினைவில் தங்கிவிட்டிருந்தன.  சொற்கள் மங்கலாகவும் ஏலக்காய் வீச்சு சற்றுத் தூக்கலாகவும் மனதை நிறைத்து பதினேழு வயதிலேயே எனக்குள் நாஸ்டால்ஜியாவை துளிரச் செய்தது.

ஆவலும் பதட்டமும் உருவாய் நான் கங்காதர் வரும் திசையைப் பார்த்திருந்தேன். பனியனும் வேட்டியும், வெள்ளை தாடியும், பெரிய கண்ணாடியும், உலகத்தில் இனி என்ன நடந்தாலும் தன்னைப் பாதிக்காது என்ற பாவனையுமாக ப்ரஃபசர் மெல்ல நடந்து வந்து புத்தக குவியலை அப்புறப்படுத்தி நாற்காலியில் அமர்ந்தார். சைகையால் எங்களை அமரச் சொல்ல, நடேசன் வேறிரண்டு குவியல்களை விலக்கி அவர் வேண்டுகோளுக்கு  இணங்க வழிசெய்தார்.

“கண்ணா வாடா” என கண்ணனைத் தூக்கி அவர் மடியில் வைக்க முயல, அவன் துள்ளிக்குதித்து என்னருகே வந்தமர்ந்தான். “கையில என்ன?” கண்களை சுருக்கி நூலை இறுக்கிப் பிடித்திருந்த என் கைகளை பார்த்தவர், பார்வையை உயர்த்திக் குழம்பியவராக நடேசனிடம் “யாரிது?” என்று கேட்டார்.

“செள -செளமித்ரா” என்றேன்.

“அது ஆணின் பெயராச்சே.”

“அப்பா வங்காள சினிமா பார்ப்பார்”

“ஆங்… செளமித்ரா சாட்டர்ஜி. ரேவோட படங்கள் – ல நிறைய நடிச்சிருந்தாலும் அப்புவா நடிச்சது தான் எனக்குப் பிடிச்சிருந்தது.  நல்ல வங்காள முகம். உருண்டையான கண்கள். உருளையான கண்ணங்கள்..”

ஒரு நிமிடம் என் முகத்தை உற்றுப் பார்த்தார். அப்பார்வை சிறிய கண்களும் ஒடுங்கிய  கண்ணங்களும் கொண்ட என்னை என் பெயருக்கு நான் அருகதையற்றவள்ளோ என்ற ஐயத்தை எழுப்பியது.

“இராமயணத்தில சுமித்ராவின் மகன் லட்சுமணன் – அதனால செளமித்ரன்னும் ஒரு பெயரிருக்கு” என்றார்.

நான் தலையசைத்தேன்.

“இங்க பிரச்சினையில்ல. பெண் பெயர் மாதிரி தான் தெரியும். நம்ம ஊரில செளமித்ராணு ஒரு ஆண் வந்தாதான் எல்லாரும் முழிப்பாணுங்க” என்று சிரித்தார்.

நான் சொல்வதறியாது கண்களைத் தாழ்த்தி என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். அன்றே நூலகத்தில் நான் பின்னட்டையை கவனித்திருந்தால் அதை இருந்த இடத்திலே வைத்திருப்பேன். கடைசி முகலாய மன்னனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்படும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் –  நலிவுற்ற பகதூர் ஷா சஃபர் உயிர்த் துளைக்கும் பார்வையுடன் நம்மை உற்று நோக்கியவாறுப் படுத்திருப்பார். கருஞ்சிலையின் கண்கள் போல் அச்சுறுத்திய அசைவற்ற விழிகள் எனக்கு அந்த வயதில் பலவித கனவுகளையளித்திருக்கிறது. அதுவரை தனியறையில் எவ்வித பயமுமின்றி உறங்கியவள் என் பாட்டியுடன் தூங்க ஆரம்பித்தேன்.

“அந்த புத்தகத்த நீயே வச்சிக்கோ. போட்ட இருநூறு பிரதிகள்-ல உற்றார் உறவினர் கொடுத்தது போக நூத்தம்பது எங்கிட்ட அப்படியே இருக்கு”

“நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்.”

“அப்படியா. சரி” அவர் கூறிய தொனியில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.

அவரிடம் எப்படிச் சொல்வது – பாபர் லோடியை பானிப்பட் போரில் வீழ்த்தும் போது நான் களத்தில் செயலற்று நின்று பார்த்திருந்தேனென்று. அக்பர் ஆக்ராவிலிருந்து ஃபத்தேப்பூர் சிக்ரிக்கும், ஃபத்தேப்பூர் சிக்ரியிலிருந்து லாகூரிருக்கும், லாகூரிலிருந்து மீண்டும் ஆக்ராவிற்கும் தலைமையகத்தை மாற்றும் போது அவர் அரண்மனை குடிகளில் ஒருத்தியாய் நானும் அலைக்கழிக்கப்பட்டேனென்று. ஜஹாங்கிர்  சொந்த மகனான குஸ்ராவை குருடாக்கிய போது தான் பெற்ற மகனைத் தீண்டியது போல் இதயம் பதறியதென்று. தன்னிலை மறந்து ஹிரா பாய் மாங்கனியைப் பறித்த போது மனதைத் தொலைத்தது ஒளரங்கசப் மட்டுமல்ல என்று. அழிவு உறுதி என்றானபின் பகதூர் ஷா சஃபர் மகள் குல்சுமை பிரியும் தருவாயில் கண்கள் எப்படிக் கலங்கியதென்று…

“ப்ளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்திருக்கா. இஞ்சினியரிங் சேரலாம்னுட்டு இருக்கா…” நடேசன் சொல்லத் தொடங்கினார்.

கங்காதர் என்னிடம் “கட்-ஆஃப் மார்க் எவ்வளவு?”

“192.75”

“எதில போய்டுச்சு?”

“கணக்கு”

“எத்தனாவது நாள் கெளன்சலிங்?”

“அஞ்சு”

“பெரிய காலேஜ் ஒன்னும் தேராது”

என் வகுப்பினருக்கு ஒதுக்கீடு உண்டு. ஒரு வேகத்தில் வாய் வரைக்கும் வந்துவிட்டது நல்ல வேளை ஓசை ஏதும் எழவில்லை.

“உனக்கு எதில ஈடுப்பாடு?”

“வரலாற்றாய்வு”

“சுத்தம்…”

எனக்குத் தொண்டையில் ஏதோ கனத்தது. இவர் கணக்கு கைடு எழுதிய கங்காதரே தான்.

என் படிப்பாற்றல் விலைபோகாததால் நடேசன் என்னுடைய வேறு ஒரு சிறப்பை எடுத்துவிட்டார் “லட்சுமி யோகம், சரஸ்வதி யோகம் இரண்டும் இருக்கு இவ ஜாதக்கத்தில்..”

கங்காதர் ஆர்வம் வந்தவராய் “அதெப்படி?” என்றார்.

“ஒன்பதில குருவும், சுக்கிரன், குரு, புதன் கேந்திர திரிக்கோணத்திலயும் அமஞ்சிருக்கு. குரு உச்சத்தில இருக்கார்…”

“அட” கங்காதர் என்னை அதிசயப் பிறவி போல் பார்த்தார். ஆச்சரியம் தணியாதவராய்,  கண்ணன் கிறுக்கிக் கொண்டிருந்த ஏட்டைப் பிடுங்கி கட்டம் கட்டமாய் வரைந்தார். “இப்படியா?” எனக் கிரகங்களை நடேசன் வர்ணித்தபடி அந்தந்த கட்டங்களுக்குள் அடைத்தார். எனக்கிருந்த அதிர்ச்சி கூட கண்ணனுக்கு இருக்கவில்லை. அவன் பக்கத்திலிருந்த செய்தித்தாளை எடுத்து பெண் மந்திரிகளுக்கு மீசை வரைய ஆரம்பித்திருந்தான்.

“சுக்கிரன் அங்க இல்ல சார். இங்க …”

நடேசனுடன் தீவிரமாகக் கோள்கள் கிரகங்கள் ஆண்டு பலன்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். எந்த ஒரு எழுச்சி உரையையும் அதன் பின் அவர் எனக்களிப்பதாயில்லை. நானும் “முகலாயர்” பற்றிக் கேட்கவும் முயலவில்லை. அது என்றுமே ஏலக்காய் வீச்சுடன் என் மனதில் தங்கியிருக்கட்டும். கங்காதர் என் கணக்கு கைட் எழுதியவராகவே நினைவில் இடம்பெறட்டும். ஒரு படைப்பை பற்றிய புரிதல் படைத்தவனை விட நுகர்ந்தவனுக்கே அதிகம் உண்டோ? காட்டு யானைகளும் எழுத்தாளர்களும் தூரத்திலிருந்து ரசிக்கப் படவேண்டியவர்களோ?

“ஐந்தாம் நாள் கெளன்சலிங்னு பயப்படாதே. சீட் கிடைக்கும். எல்லாம் குரு பார்த்துப்பார்” என்று மட்டும் சொல்லி மூன்று கோப்பை ராகி மால்ட் கலந்து விருந்தோம்பல் செய்து வழியனுப்பி வைத்தார். ராகி மால்ட் என் கனத்த மனதை சற்று இலகுவாக்க உதவியது.

***

கைப்பேசி 2.15 எனக் காட்டியது. இரவு நான் மட்டுமே அரங்கிலிருக்க, என் அபோத மனம் அன்றே தொகுத்த ஆவணப்படம் ஒன்றைத் திரையிட்டது. எண்ணை ஒழுக நின்ற கண்ணனை நான் இடுப்பில் தூக்கிவைத்து நிற்கிறேன். ஒரு கையில் க்ரிம் பிஸ்கட்டும் மறு கையில் தட்டை முறுக்கையும் மாறி மாறிக் கடித்து தின்று கொண்டிருக்கும் அவன் காரை கண்டதும் துள்ளிக் குதித்து முன் இருக்கையில் ஏறுகிறான்.  நடேசன் காரை ரிவர்சில் செலுத்த, பொடியன் என்னைப் பார்த்து விக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டே கையசைக்கிறான். “முகல்-இ-அசாம்” இல் அனார்கலியாக நடித்த மதுபாலா அணிந்திருந்த அதே உடையை நான் உடுத்தியிருப்பதை உணர்ந்து என்னை நானே ரசிக்க கண்ணாடியைத் தேடுகிறேன். அதளித்த பிம்பத்தில் உடை முழுதும் இட்லி மாவு திட்டுகள் படிந்திருப்பதைக் கண்டு மனமுடைந்து அழுகிறேன். “மகளே..!” என்ற அலறல் கேட்டு பதறி நான் ஓடிச் செல்ல, ஒரு மெத்தையில்லாத மரக்கட்டிலில் பனியனும் வேட்டியும் கருப்பு-வெள்ளையுமாய் கங்காதர் காட்சியளிக்கிறார். அசைவற்ற கருஞ்சிலை கண்களுடன் வலக்கை நீட்டி “உன் ஜாதகத்தைக் கொடு” என்கிறார். அருகே சிகப்பு அட்டைக்கொண்ட சுமார் நூற்றைம்பது பிரதிகள் குவியலாய் கிடக்கின்றன.

Leave a comment