
December 18 – December 25, 2019
முதல் சர்வதேச பயணம், மலேசியாவிற்கு.
எழுத்தாளர் ம. நவீன் ஒருங்கிணைக்கும் வல்லினம் விருது விழா மற்றும் சுவாமி பிரம்மானந்தா வித்யாரண்யத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அழைக்கப்பட்டிருந்தார். ஜெவுடன் அருணாமாவும் சைதன்யாவும் பிரயாணத்திற்கு ஆயத்தமாக, GSSV நவீனும் நானும் உடன் தொற்றி கொண்டோம்.
கூலிம் தியான ஆசிரமத்தில் எழுத்தாளர் சை. பீர். முகம்மதிற்கு வல்லினம் விருது அளிக்கப்படவிருந்தது. விழாவில் ம. நவீனின் நாவல் ‘பேய்ச்சி’யை வெளியிட்டு அருணாமா உரையாற்ற இருந்தார். சுவாமி பிரம்மானந்தாவால் அருளாளர் விருது ஜெவிற்கு வழங்கப்படவிருந்ததும் கூட.
GSSV மற்றும் சைதன்யாவுடன் கோலா லம்பூரை இரண்டு நாட்கள் சுற்றுவது. பின்பு கூலிமில் ஜெ தொடர்ந்து சொற்பொழிவதனால் அங்கு சென்று இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் லயித்திருப்பது. இது தான் திட்டம். மலேசியா மயிலாடுதுறை போலப் பரிச்சயமாகியிருந்ததால், ஜெ மற்றும் அருணாமா கோலாலம்பூரைத் தவிர்த்துவிட்டு நேரே கூலிம் செல்லவிருந்தனர்.
திருவனந்தபுரத்திலிருந்து விமானம். டேக் ஆஃபின் போது விமானம் சரிவாக எக்கும் தருணம், பொன்னிற வாகன விளக்குகள் திருவனந்தபுர வீதிகளுடன் சேர்ந்தே மேலெழுந்தன. விண்ணிலிருந்து வழிந்தும் வழியாத லாவா பிழம்பு போல். செயற்கை அதிசயங்களும் மனதிற்கு உவப்பானதாகத் தான் இருக்கிறது.
நான்கு மணிநேரத்தில் மலேசியா வந்துவிட்டோம். எழுத்தாளர் ம. நவின் அவர்கள் எங்களை வரவேற்றார். மறுநாள் நடக்கவிருக்கும் இலக்கிய விழா ஒருங்கிணைப்பாளர் போலன்றி மாறா புன்னகை மற்றும் புத்துணர்ச்சியுடன் இருந்தார். அவரது வீட்டிற்குச் செல்லும் வரை வல்லினம் உருவான சூழல், மேற்கொண்ட முயற்சிகள், சந்தித்த இடர்கள் குறித்துப் பேசினார். இடிப்பஸ் சிக்கல் தழுவிய ஒரு சிறுகதையைப் பிரசுரித்து, அனைத்து பத்திரிக்கைகளாலும் சாடப்பட்ட நிலை வல்லினத்திற்கு ஏற்பட்டபோது, இலக்கியத்தில் நாட்டமுள்ள சுவாமி பிரம்மானந்தா எதிர்வினையாற்றியிருக்கிறார்.
நவின் வீட்டில் குளித்து கிளம்பி, அம்மா அவர்களிடம் ஒரு கரும்பு ஜூஸ் கோப்பையளவு மலேசிய தேநீர் வாங்கி அருந்திய கையோடு பத்து (Batu) குகைகளுக்குப் புறப்பட்டோம். Instagram புகழ் பலவண்ண நிற படிகளையும், திருச்சி லலிதா கொள்ளையர்களை விடவும் நூதனமாகத் திருடும் வானரங்களையும் கடந்து குகைக்குள் நுழைந்தோம்.

சுண்ணாம்பு கல்லானாலான பாறைகள், கூம்பு போல் நடுவே குடையப்பட்டிருக்கும் வெளி, அலங்கார விளக்குகள் போல் ஆங்காங்கே தொங்கும் கூர்மையான குகை பாறைகள் – அவ்விடம் ஒரு தொலைந்த பண்பாட்டின் கத்தீட்ரல் போலத் தோன்றியது. ஒரு மணி நேரம் வியந்து நோக்கிய பின் மலேசியா வந்ததிற்கு அதிகாரப்பூர்வ சான்றாக பத்து மலை முருகனுடன் புகைப்படம் எடுத்த பின்னர் கிளம்பலானோம்.

அடுத்த நிறுத்தம் கோலா செலங்கூரில் உள்ள ஓர் ஓராங் அஸ்லி அருங்காட்சியகம். ஓராங் அஸ்லி, இன்றைய மக்கள் தொகையில் 0.6 சதவீதம் மட்டுமே இருக்கும் மலேசியாவின் பூர்வக்குடியினர். அருங்காட்சியகத்தில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், சமையல் சாதனங்கள், பனை ஓலையினால் பின்னப்பட்ட உடைகள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. ஓராங் அஸ்லியினர் ஒரே நேரத்தில் வேட்டையாடி – சேகரித்து உண்பவர்களாகவும், நிலத்தை உழுபவர்களாகவும் இருந்துள்ளனர். அருங்காட்சியகத்தின் வெளியே அவ்வினத்தைச் சேர்ந்த சிறுமியர் இருவர் சில கைவினைப் பொருட்களை விற்பனையிற்கு அடுக்கியிருந்தனர். அதில் கயிற்றை மரப் பெட்டகத்திலிருந்து விடுவிக்கும் விளையாட்டும் ஒன்று. ஐந்து நிமிடங்களாக முயன்றும் கயிற்றை அதிலிருந்து விடுவிக்க முடியவில்லை. பழம் புளிக்கும் என்று இருந்த இடத்தில் வைத்துவிட்டேன். GSSV யின் விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாகச் சிறுமிகள் கெ கெவென சிரித்தனர். சைதன்யா மட்டும் தமிழகத்தின் மானப் பிரச்சனை என்பதால் ஐந்து நொடியில் கயிற்றை விடுவித்து ‘இவ்ளோதானா’ என்னும் தோரணையில் நின்றிருந்தார். மற்றுமொரு விளையாட்டு, டார்ட்ஸ் போல இலக்கு வட்டங்களை நோக்கி ஈட்டிகளை எய்ய வேண்டும். சிறு ஈட்டிகளை மூங்கில் குச்சியின் துவாரத்தில் செலுத்தி வாயருகே வைத்து ஊத வேண்டும். ம. நவீனும் சைதன்யாவும் சிறப்பாக குறி பார்த்து ஊதினர். பிற இருவரின் செய்கைகள் வழக்கம் போல் குறிப்பிடும்படி இல்லை. தன் சாகசங்களின் பட்டியல் நீள, சைதன்யா பூர்வ ஜென்மத்தில் ஓராங் அஸ்லி குடிகளில் ஒருவராக இருந்திருக்கலாம் என்ற யூகம் குழுமியிருந்தவர்களிடம் வலுத்தது.

செலாங்கரூரில் சுற்றுலா பயணிகளைக் கவரும் இன்னுமொரு சடங்கு – குரங்குகளுக்குக் காய்கறிகள் அளிப்பது. அவை வெள்ளி லங்கூர் குரங்குகள். மென்மையான விரல்கள் கொண்டவை. எளிதில் அணுகக் கூடியவை. மனிதர்கள் உட்பட அனைத்து விளங்குகள் மேலுள்ள ஒரு பொதுவான அவநம்பிக்கையால் நான் அவற்றை அணுகவில்லை. பயம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாததால், சிங்கங்கள் என்றால் முயன்றிருப்பேன் என்று சொல்லி நழுவிவிட்டேன்.

நவின் மாலை பெட்ரனாஸ் டவர் பார்க்க அழைத்துச் சென்றார். நாங்கள் கோலா லம்பூரின் போக்குவரத்து நெரிசலையும் கூடவே பார்த்தபடி சென்றோம். நுழைவு வாயில் கூட கண்ணில் அகப்படாதபடி அமைந்த கண்ணாடி கட்டிடங்கள் தொடர்ந்து உடன் பயணித்தன. இந்திய நெரிசல்களைவிட இரைச்சல் அறவே இல்லை என்றாலும் அந்த ஊர் பெட்டிக் கடை, ஜவுளிக்கடை விளம்பரம் என மையப் பகுதியில் எதுவும் காணக் கிடைக்காததால் சற்று சோர்வு தட்டியது. இரட்டையர் அருகே வர வர அந்த ஐயர்ச்சி மெல்ல கரைந்தது. அங்கும் இங்குமாய் இடைவெளி விட்டு ஒளியேற்றப்பட்டிருந்த கட்டிடங்கள் தீயில் வாட்டிய மக்காச் சோளம் போலிருந்தன. அது வரையில் நான் இரட்டையரைக் குறைத்து மதிப்பிட்டிருந்தேன் என சிரத்தை சிரமத்துடன் எக்கிய போது உணர்ந்தேன்.

கீழே உள்ள வணிக வளாகத்தினுள் பத்து அடி கிறிஸ்துமஸ் மரம் ஒன்று சிவப்பு பந்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது பொருத்தப்பட்டிருந்த செயற்கை விளக்குகளின் வெளிச்சம் இரட்டை கோபுரங்களைப் புகைப்படம் எடுக்க முனைந்த சைதன்யாவிற்கு நெருடலாக அமைந்தது. கீழிருந்து வான் நோக்குபவர்களுக்கு அங்கு அரங்கேறும் ஒளியின் வீச்சு ஒரு விந்தையே. செயற்கை விளக்குகளின் ஒளி இரட்டை கோபுரங்களின் ஒளியை மங்கலாக்கியது. கோபுரங்களின் ஒளி நட்சத்திரங்களின் பிரகாசத்தை மழுங்கடிப்பதாகத் தோன்றியது.

பிரிக்ஃபீல்ட்ஸ் என்று அதிகாரப்பூர்வமாகவும் லிட்டில் இந்தியா என்று பரவலாகவும் அழைக்கப்படும் மலேசியாவின் தமிழ் வணிக மையத்தில் அமைந்த ஒரு விடுதியில் இரவு தங்கினோம். அருகே “மங்கள தீபம்” துகில் கடையிலிருந்து ஒலித்த தொண்ணூறுகளின் காதல் மெட்டுகள் தெருமுக்கு கோவில் ஸ்பீக்கரிலிருந்து ஒலிப்பவை போல் அந்த இடத்தின் அன்னியத்தை ஒரு வகையில் குறைத்தன. ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கு முன்னகர்கையில் எவரோ அதிருப்தியுடன் எஃப். எம் சேனல் மாற்றிக் கொண்டிருப்பது போல் தமிழ் சினிமா பாடல்கள் துண்டுப்பட்டு கேட்டுக் கொண்டேயிருந்தன.

அருகாமையில் ஓர் அழகிய அளவான பூ அங்காடி. அதன் வாயிலில் தன் தினசரி ரோந்தில் ஈட்டுப்பட்டிருந்த நீண்ட சிவப்பு திலகமிட்ட இந்துத்துவா நாய் ஒன்று. நவின் முன்னர் எங்களை கோலா செலாங்கூரிலுள்ள அங்காலத்தமன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு வெட்ட வெளியில் விழித்தபடி மஞ்சளும் குங்குமமுமாய் பேருருவாய் சயனத்திலாழ்ந்திருந்தது அம்மன். இவை அனைத்தையும் கொண்டு அன்று மனம் திரட்டிய காட்சித் தொகுப்பு அபாரமானது. தமிழருக்கு என்று ஒரே தாயகத்தின் சாத்தியங்களை அலச முற்படும் மனதையும் மீறி வேர் ஒன்று கிளைகள் பல என உருவான சமுகங்களைக் கண்டு மனம் வியக்கிறது. காலம் கடந்து தழைக்கும் இவ்விருட்சத்தையே அது விரும்புகிறது. முதல்முறை ஒரு Mainland வாசியாக மலேசிய மண்ணில் என்னைக் கண்டு கொண்டேன்.

நாள் இரண்டு. தன் பெயருக்கு முரணாக சாந்தமே உருவான யோகாசன பயிற்சியாளர் ராவணன் சைதன்யாவையும் அடியேனையும் நகர் வலம் அழைத்துச் சென்றார். பறவை சரணாலயம், தேசிய அருங்காட்சியகம், aquarium என சுற்றுலா தளங்களை முற்றுகையிட்ட கையோடு மீண்டும் இரவு லிட்டில் இந்தியா வந்து சேர்ந்தோம். GSSV எங்களோடு பறவை சரணாலயம் மட்டும் வந்தார். முந்தைய நாள் சாப்பிட இறால் ஏற்படுத்திய ஒவ்வாமை இரவு முழுதும் விக்கலாய் வெளிவந்தது. அவரை விடாத விக்கல் தொடக்கத்தில் எங்களுக்கு சுவாரசியமாக இருக்கவே, சைதன்யா ஒரு சிறு பரிசோதனையில் இறங்கினார். “உன்னைக் கண் தேடுதே. உறங்காமலே…” பாடலை பாடி அவரது ‘ஹிக்!’ மெட்டுடன் கூடிவருகிறதா என்று பார்க்க முயன்றார். ஒவ்வொரு வரிக்குப் பதிலாக ஒவ்வொரு வார்த்தை இடுக்கிலும் அவர் “ஹிக்!” என்ற போது தான் பயமாயிற்று. மலேசிய மருத்துவர் ஒருவரும் மதராஸ் மருத்துவர் அண்ணன் மாரிராஜூம் பரிந்துரைத்த மாத்திரைகளை உண்டு அவர் நாங்கள் தங்கிய விடுதிக்கு ஓய்வெடுக்கத் திரும்பிவிட்டார்.

நாஸ்ட்ராடமசை மிஞ்சும் தீர்க்கதரிசி ஜார்ஜ் ஆர்வெல் எழுதி 1949 இல் வெளிவந்த நாவல் “1984”. “எவன் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறானோ அவனே எதிர் காலத்தையும் கட்டுப்படுத்துகிறான்: நிகழ் காலத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவனே கடந்த காலத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறான்” என்பது நாவலில் இடம்பெறும் எல்லாம் வல்ல ஆளுங்கட்சியின் முழக்கம்.
மலேசிய தேசிய அருங்காட்சியகத்தில் மலேசியாவின் வரலாறு 11000 ஆண்டு பழமையான பெராக் மனிதனுடன் ஆரம்பித்து, 8 ஆம் நூற்றாண்டு அவ்லோக்கித்தேஸ்வரா சிலை ஒன்றில் இடர்ப்பட்டு சுல்தானேட் தோன்றும் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து சீறிப் பாய்கிறது. மூன்று காட்சியகங்கள் கொண்ட விசாலமான அருங்காட்சியகம் அது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செய்தி பலகைகள் வரலாற்றை எடுத்துரைத்தன. சிங்கபுராவிலிருந்து பரமேஸ்வரா என்னும் அரசர் அண்டை படையினரிடம் தப்பி தஞ்சம் புகுந்த இடத்தில் ஆட்சியமைக்கிறார். இஸ்காந்தர் ஷா என பின்னர் நிறுவப்படும் அம்மன்னனோடு மலேசியாவின் அதிகாரப்பூர்வ வரலாறு ஆரம்பமாகிறது. மலாக்கா சுல்தானேட்டிலிருந்து ஆட்சி 1511 இல் போர்ச்சுகீசியர்களிடம் 1641 இல் டச்சுக்கம்பெனியிடமும் பின்னர் 1824 இல் பிரிட்டிஷ் கம்பெனியிடமும் கைமாறுகிறது. பல ஐரோப்பிய அதிகாரிகள் குறித்த அறிமுக பலகைகள் காணப்பட்டாலும், எங்களை கவர்ந்தது ஜேம்ஸ் புரூக் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் ஓவியம். பிரிட்டிஷ் நடிகர் காலின் ஃபர்த்தின் சாயல் முகத்தில் தெரிந்ததும் ஒரு காரணம். கல்கத்தாவருகே பந்தேல் என்னும் ஊரில் பிறந்த புரூக், தன் 27 வயதில் பிரிட்டிஷ் ரானுவத்திலிருந்து விலகி, வணிகம் செய்வதற்காக ஒரு கப்பலுடன் சராவாக் வந்திறங்கினார். அமெரிக்க சாகசப்படங்களின் நாயகன் போல், நடப்பதைக் கண்டு நமக்கெனப்பா என்றில்லாமல், அப்பகுதியில் நிலவிய சில கலவரங்களைக் கவிழ்க்க கைகொடுத்ததால், புரூனெய் சுல்தானால் சராவாக்கின் கவர்னாராகவும் பின்னர் ராஜாவாகவும் அறிவிக்கப்பட்டார். இவ்வாறு புரூக் வழி தோன்றிய வெள்ளை ராஜாக்கள் அடுத்த நூறாண்டுகளுக்கு அப்பதவியை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாள் காலை கோலா லம்பூரிலிருந்து கெடா மாநிலத்திலுள்ள கூலிமிற்கு பஸ்ஸில் புறப்பட்டோம். கூலிம் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் நடந்த இலக்கிய அமர்வுகளில் ஜெ , சு.வேணுகோபால், சாம்ராஜ், அருணாமா உரையாற்றினர். ஜெ வின் நான்கு அமர்வுகளும் சிறப்பு. மிக குறுகிய நேரத்தில் தொகுக்கப்பட்டு வடிவ நேர்த்தியுடன் வழங்கப்பட்ட உரைகள். இயல்பாக வெளிப்படும் வடிவ ஒருமை பல வருடப் பயிற்சியால் உருவானவை. அவ்வுரைகளில் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது அவரது “மரபிலக்கியம்” குறித்த உரை. அழகியல், அறவியல், சொற்களஞ்சியம், தத்துவம் என வகுக்கப்பட்ட உவமைகளும் உணர்வுகளும் ஒரு சேர அமைந்த அழகான உரை. உரை முடித்த பின் கண்களில் நீர் ததும்பியிருந்தது.
அருணாமாவின் பேய்ச்சி குறித்த உரை அவரது முதல் உரையாதலால் அரங்கிலிருந்த பெரிய இலக்கிய விமர்சகர் தானாகவே தன்னை அப்புறப்படுத்திக்கொண்டார். அதற்கு தேவையிருந்திருக்கவில்லை. அருணாமா ஐந்து நிமிடங்கள் கடந்ததுமே புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பி விட்டார். நாவலின் ரசிக்கத்தக்கப் பகுதிகளை சிலாகித்துப் பேசிய அவரது உரை அங்கு கூடியிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. நாவலின் 60 பிரதிகள் நிகழ்ச்சி முடிவில் விற்று விட்டதாக நவின் அவர் தளத்தில் எழுதியிருந்தார்.
உரையின் காணொளியைப் பார்த்து லோகமாதேவி உளமார்ந்து எழுதிய இப்பதிவைப் படித்த பின், அருணாமா ரசிக்கும் படி ஒரு நாவல் எழுதிவிட்டால் போதும் என் வாழ்க்கைப்பயனை அடைந்திடுவேன் என நம்பத் தொடங்கியுள்ளேன்.
அங்கத அண்ணல் சாம்ராஜ் அவர்களின் உரை இளம் வாசகி சைதன்யா சொன்னது போல் மிகவும் காத்திரமான ஓர் உறையாக அமைந்தது. மலேசியக் கவிதை சூழலை நவின் அவருக்கு அளித்த 19 தொகுப்புகளைக் கொண்டு அறுவைப் பகுப்பாய்வு செய்திருந்தார். இதயம் பலவீனமானவர்கள் அவ்வுரையை யூட்டியூபில் காண வேண்டாம்.
பின்னர் இரு நாட்கள், ஆசிரமத்தின் ஆண்டு விழா. பஜனை, பூஜை நடுவில் ஜெ மற்றும் சு.வேணுகோபால் அவர்களின் சொற்பொழிவுகள் அரங்கேறின. சு.வேணுகோபால் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். அவரின் நாட்டார் தெய்வங்கள் குறித்த உரையில் வியப்பூட்டும் அனுபவங்கள் டாமினோ காய்கள் போல் ஒன்றின் பின் ஒன்றாக விழுந்தபடியிருந்தன. அவர் சொன்னவற்றில் ஒரு தொன்மம் கூட எனக்கு முன்னரே தெரிந்ததில்லை. ஜெ அவர்களின் உரைகள் இந்துக்களிடையே உள்ள சில தவறான புரிதல்களை நிவர்த்தி செய்யும் வாக்கில் அமைந்தன. இந்து ஞானம் குறித்த ஒரு எளிய அறிமுகத்தையும் முன்வைத்தன. இந்து மதத்தில் நிலவும் முரணியக்கங்கள் குறித்தும், மூல நூல்கள் பற்றிய விளக்கங்களும், சிறு பெரு தெய்வங்கள் வழிப் பாட்டு முறைகள் குறித்தும் தொடர்ந்து இரண்டு நாட்களில் நான்கு உரைகள் ஆற்றினார்.



இரு உரைகள் முடிந்த தினத்தன்று “சத்தே (satay) சாப்பிடுகிறீர்களா?” என்றார் குமாரசாமி, அவரது கனீர் செய்தி அறிவிப்பாளர் குரலில். கூலிம் இலக்கியக் களத்தைச் சேர்ந்த அவர் விரிவுரையாளராக பணிபுரிகிறார். சோயாவால் செய்யப்பட்ட மாதிரி சிக்கன் தந்த ஐயர்வால் ஜெ வை அவர் சூழ அமர்ந்தோரிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் அவர் ‘காடி’ யில் ஏறிக் கொண்டோம். குமாரசாமி ஒரு மலாய் உணவு விடுதியில் நிறுத்தினார். விடுதியின் எதிர்புறத்தில் மலாய்களுக்காக பிரத்தியேகமாக இயங்கும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய திரைகளில் கால்பந்தாட்டம் பார்த்தபடி சிலர் ஷிஷா (ஹூக்கா) மிதப்பிலிருந்தனர். சில மேசைகள் தள்ளி ஒரு ஹிஜாப் அணிந்த பெண்மணி பொது இடத்தில் அன்பு வெளிப்படுத்துவதை முதன் முறையாகக் கண்டேன், தன் தோழன் தோள் அணைத்தபடி ஆசுவாசமாய் அவள் அமர்ந்திருந்தாள்.
குமாரசாமி வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குள் மலாய் பையன் ஒருவன் ஆர்டர் எடுக்க வந்து விட்டான். நாங்கள் “சத்தே” என்று அவனிடம் முனங்கிவிட்டு ஒருவர் முகம் ஒருவர் பார்த்த பின் நான்கு அதிகம் என்ற முடிவெடுத்து இரண்டு என்று அவனிடம் செய்கை செய்தோம். அவன் புரிந்து கொண்டவனாய் சென்றவன் ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் வந்து மலாயில் எதையோ கேட்டு மலைக்க வைத்தான். நல்ல வேளையாக குமாரசாமி அருகில் தென்பட, நாங்கள் குறிப்பால் உணர்த்த முயல்வதை நிறுத்திக் கொண்டோம். குச்சியால் துளைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளான ‘சத்தே’கள் பத்து, இருபது என்று பத்தால் கூட்டி ஆர்டர் செய்யப்பட வேண்டியவை என அவர்களின் உரையாடலிற்குப் பின் புரிந்தது. அந்த கடை வரலாற்றில் இரண்டே இரண்டு சத்தே யை ஆர்டர் செய்தது நாங்களாகத்தான் இருக்கும். பையன் நமட்டு சிரிப்புடன் ஒரு இருபது சத்தேயை எடுத்து வரச் சென்றான்.
மலேசியா வந்து நான்கு நாட்கள் ஆகியும் அந்த விடுதியில் தான் வெளிநாட்டில் இருக்கும் உணர்வையடைந்தேன். பொதுவாக மலாய் விடுதிகளின் முகப்பில் சீன இந்திய உணவகங்கள் விடவும் அதிக பிரகாசமளிக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்குமாம். எதிர் மேசையிலிருந்த பையனின் முகம் விளக்கின் ஒளிபட்டு ஷிஷா புகை நடுவே சிவப்பாய் மிதந்தது. திரையில் மஞ்சள் உடையணிந்த வீரன் கோல் அடிக்கும் போது இன்னும் ‘மப்’ பாகாத பசங்கள் ஆர்ப்பரித்தார்கள். குமாரசாமி பொது வெளியில் புகைப்பிடிப்பது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதிகம் கண்காணிக்கப்படுவதில்லை என்றார். அந்த விடுதியில் கூட ‘இது ஷிஷா பகுதி’ என்று பெரிய எழுத்துகள் அடங்கிய பேனர்கள் காற்றில் அசைந்த படி தான் இருந்தன. சக மேசைகளை ஆக்கிரமித்த பசங்களை நோட்டமிட்ட சைதன்யா சிங்கப்பூரை விட அங்கே கைப்பேசியை சதா நோக்குபவர்கள் குறைவு என்றார். எங்கள் அருகே, எட்டில் ஆறு மேசைகளில் ஒருவராவது தலை குனிந்தபடியே சுற்றத்தைத் துறந்து துரித வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஜெ விற்கு அருளாளர் விருது வழங்கப்படவிருந்த மாலை.. ம. நவீன் எங்களுக்கு அந்த மாகாணத்தில் கிடைக்கும் சிறந்த ‘புளோட் உடாங்’கை வாங்கி வந்தார். புளோட் உடாங்க் இறால், தேங்காய், புட்டரிசி கொண்டு இலையால் அவித்துச் செய்யப்படுவது. ஒரு விதத்தில் இனிப்பு கொழுக்கட்டைக்குத் தூரத்துச் சொந்தம். ஆசிரமத்தின் வெளியே தலா இரண்டு என சுடச் சுட விழுங்கிவிட்டு ஒரு சிறிய பொட்டலத்தை ரகசியமாக எடுத்துச் சென்றோம். சைதன்யா ‘வெளியே வராது விரைவில் சாப்பிட்டு விடவும்’ என்னும் தாழ்ந்த குரலில் விடுத்த கோரிக்கை அருளாளர் செவிகளைச் சென்றடையவில்லை. சிறிது நேரம் கழித்து அப்பொட்டலத்தை அறையின் வெளியிலிருந்த மேசையில் கொண்டு வந்து பிரித்தார். எதிரே அமர்ந்திருந்த சுவாமிகள் பார்க்க ஒரு இறால் மோதகத்தைக் கையில் எடுத்தார். ஒரு வேளை நாங்கள் வெள்ளையராய் இருந்திருந்தால் முகம் நிறம் மாறுவது தெரிந்திருக்கும். “புட்டரிசியால் செய்யப்பட்ட இனிப்பு அது” என அந்த பெண் சுவாமிகளே விளக்க முன்வர, வந்த சிரிப்பைக் கடிந்து கொண்டோம்.

இறுதி நாள் எழுத்தாளர் மணிமொழி அவர்களின் காடியில் புத்ரஜெயாவிற்கு கிளம்பினோம். 1990களில் எழுப்பப்பட்ட புத்ரஜெயா மலேசியாவின் நிர்வாக மையம். கோலா லம்பூரிலிருந்து 25 km தொலைவில் உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் ஒவ்வொரு கட்டிடம். இஸ்லாமியத் தழுவலுடன் வடிவம் கண்ட நவீன கட்டிடங்கள், திறந்த வெளிகளுக்கும் இடை வெளிகளுக்கும் பிரதிநிதித்துவமளித்து எழுப்பப்பட்டவை.
கண்ணைப் பறிக்காத வெளிறிய நிறங்களிலான அந்த கட்டிடங்கள் அறுதியாகப் பிரதமரின் இயங்குதளமான பர்தன புத்ராவில் வந்து முடிவடைந்தது. அந்த வெண் பச்சை நிறகட்டிடம் அருகே வர வர, அனைத்து சாலைகளும் இங்கு தான் வந்தடையும்.. வந்தடைந்தாக வேண்டும் என்னும் பிரமை ஏற்பட்டது. செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த புத்ரஜெயா ஏரியை எதிர் நோக்கிய படி மாகாணத்தின் பிரதான மசூதியான புத்ர மசூதி அருகே இருந்தது. பர்தன புத்ராவின் முகப்பில் மலேசிய மாநிலங்களின் 14 கொடிகள் முகமன் காட்டின.

பர்தன புத்ராவின் முன்னர் இருந்த வெற்று பரப்பில் மக்கள் பீச்சில் திரள்வது போல் சாவகாசமாய் செல்ஃபியும் ஹவர் போர்டுமாக திரிந்தனர். மரபின் படி நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கலானோம். அங்கு PUTRAJAYA என்னும் ராட்சச எழுத்துகள் சதுரப் பரப்பின் நடுவில் நடப்பட்டிருந்தன. நான் ஜெவை “அதன் அருகே நில்லுங்கள் சார். ஒரு புகைப்படம் எடுத்து PUTRAJAYAMOHAN எனத் தலைப்பிடலாம்” என்றேன். அவர் புகைப்படம் வேண்டாம் என்று விட்டார். ஜோக் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
மலேசியாவிலிருந்து நினைவாக ஒரு ரிங்கிட்டையும் பத்து செனையும் மலேசிய டைரி மில்குகளையும் வீட்டிற்கு எடுத்து வந்ததால் கடும் எதிர்வினைக்குள்ளாக நேர்ந்தது (தம்பி : வாங்கறது தான் வாங்கற, அவங்க ஊர் சாக்லெட் வாங்க வேண்டியது தான? அது ஓசியில் கிடைத்தவை என்று சொல்ல நா எழவில்லை). சாம்ராஜ் அவர்களின் உரையின் குறிப்புகள் அடங்கிய நோட் புத்தகம் ஒன்றும் இருந்தது. கிரிப்டிக் மொழியோ என்று ஐயப்படவைக்கும் வரலாற்றில் இடம் பிடித்த அந்த தரவுகளின் சிறப்பையோ, மற்றொரு பொக்கிஷமான அருளாளர் பயன்படுத்திய பேனாவின் மேன்மையையோ அவன் ஒரு போதும் அறியப் போவதில்லை. மலேசியாவிற்கு மீண்டும் பயணிப்பேன் என்று உள்ளுணர்வு சொல்கிறது. எண்ணைப் பனைத் தோட்டங்கள் சற்று அச்சமூட்டினாலும், எங்கள் வரவை எதிர் பார்த்துக் கனிந்த ரம்பூத்தான் பழங்களும், ஜெலாட்டோ சாம்பிள்கள் தந்த மலாய் அக்காவும், கூலிம் ஆசிரமத்தைக் காக்க வல்ல விச்சுனுவும், ஆசிரமத்து சிறுவர்களும், சுண்ணாம்பு குன்றுகளும், ஷிஷா புகையும், களிப்பூட்டிய ஜெவின் ஒன் லைனர்களும் இன்று நினைக்கையில் என் உள்ளுணர்வை வலுப்படுத்தவே செய்கின்றன.
புகைப்படங்கள் : சைதன்யா