அபி தீட்டும் அச்சங்கள்

tetrachromat

மனிதர்களில் ஒரு சிலர் மரபணு மாற்றத்தால் பிறர் கண்ணுக்குத் தெரியாத நிறங்கள் காணக்கூடிய திறன் பெற்றிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களை விட தொண்ணூறு லட்சம் வரையில் அதிக நிறங்கள் பார்க்க முடிந்த அவர்களை ‘Tetrachromats’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். 

தான் அவ்வாறு ஒரு Tetrachromat என்று அறியாத ஓவிய ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களை ஏரியோரம் அழைத்துச் செல்கிறார். மாணவர்களைப் பார்த்து “அந்த பாறையின் ஓரத்தில் உள்ள ஊதா கோடு தெரிகிறதா? அந்த இலையின் நுனியில் துவங்கும் அந்த சிவந்த நரம்பு தெரிகிறதா?” என்று கேட்கிறார். மாணவர்களுக்குப் பாறை தெரிகிறது. இலை தெரிகிறது. ஆனால் ஊதா கோடோ சிவந்த நரம்போ தெரிவதில்லை. சிலர் ஆசிரியர் அடிக்கு பயந்து தெரிகிறது என்று சொல்லி வைக்கிறார்கள்.  ஆசிரியரின் முனைப்பை அறிந்த நல்ல மாணவர்களோ அவர் சுட்டிய நிறங்களை தன் அகத்தில் துல்லியமாக  உருவகித்துப் பதிலளிக்கிறார்கள்.  அவ்வோவிய ஆசிரியர் கவிஞர் அபி என்றும், அந்த நல்ல மாணவர்களில் ஒருத்தி நான் என்றும் பாவித்து நிகழ்ந்த வாசிப்பனுபவத்தைப் பகிர நினைக்கிறேன். அபி அவர்களது கவிதைகளை நாம் அகச் சித்திரங்களாக்கி அணுக முற்படுகிறோம். அவ்வாறு அறிமுகமாகும் பலத் திறப்புகளை நாம் நனவிலி கொண்டே தொகுத்தறிகிறோம்.

சுயம் அறியும் அருவம்

abhi-kavithaigal-10015242-250x250h

ஊட்டியில் அபூர்வமாக வெயில் சுட்டெரித்த ஒரு பகல் வேளையில் சில நண்பர்கள் கூடி அபி அவர்களின் கவிதைகளை இணைந்து வாசித்தோம். அதில் தமக்குப் பிடித்த கவிதையை ஒருவர் வாசிக்க, பிறர் அக்கவிதையைப் பற்றி தத்தம் வாசிப்பினை பொருத்திப் பார்த்தனர். 

இவ்விதம் அபியின் ஒரு கவிதை

உன்னைச் சுற்றி

வட்டங்கள் உருவானபின்

விலகிக் கொள்கிறேன்

இனி

வட்டங்கள்

செறிவூட்டியபடி

உன்னைச் சுற்றி வரும்

                                    (சுற்றி)

ஒவ்வொரு வாசிப்பிலும் மாணவனை செறிவூட்டிய குருவாக, சேயைப் பிரிந்த தாயாக, இறுதியில் மனிதனை தன் போக்கில் விட்ட இறைவனாக  இக்கவிதையில் வட்டமிட்டு விலகி நிற்கும் அந்த “நான்” கண்டயைப்பட்டு மாறிக்கொண்டேயிருந்தான். 

வெகு நாட்கள் கழித்து  இதே கவிதையைப் படிக்கும் போது அவரது கவிதைகளின் கூட்டுத் தரிசனமாக ஒரு சித்திரம் எழக் காண்கிறேன். மொழி சொற்களின் ஊடே வட்டமிட்டப்படி கவிதையைப் படைக்கிறது. பின்னர் அம்மொழியடையாளங்கள் விலகி நின்று அவை உருக்கொடுத்த கவிதை தம்மை மீறி வெளிப்படுத்தும் உணர்வுகளை ‘இனி வட்டங்கள் செறிவூட்டியபடி சுற்றி வரும்’ என்று வாழ்த்தி விலகி நின்று  வேடிக்கை பார்க்கின்றன.  

அச்சங்களின் கூட்டு

இன்னொரு அனுபவம். மலேசியாவிற்கு முதன்முறையாகப் பகலில் விமானத்தில் வந்திறங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு துன்ப அதிர்ச்சி காத்திருக்கும். மேலே இருந்து நிலத்தை நோக்கும் போது எங்கும்  நிறைந்திருக்கும் பச்சையைக் கண்டு மெய்சிலிர்த்துப் போவர். ஆனால் வந்திறங்கிய பின் அணிவகுத்து நிற்கும் அப்பச்சை மரங்கள் அனைத்தும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட செம்பனை மரங்களே என்று உணரும் போது மிரட்சியே மிஞ்சும். தொழிற்சாலைகள் போல் இயங்கும் பனை காடுகளை கண்டு அபி அவர்களும் இப்படி தான் மிரண்டிருப்பார். அதற்குச் சான்று அவரது வரிகள்.

விதைத்த வினை

விளைந்தது

விளைந்தவை உதிர்ந்து

மீண்டும் பெருகின

மீண்டும் பெருகின

மீண்டும் …

என்கிறார்

                      (வினை)

தொடர்ந்து அந்த கவிதையில், ‘வினையை அறுக்க எவருமில்லாது யுகங்களை நிரப்பி வழியும்’ அந்த காட்சியை என் வாசிப்பில் செம்பன்னை காடுகளோடு பொருத்தி பார்க்கையில் எழுந்த மிரட்சி பலமடங்கானது.

boggartஇன்னொரு அனுபவம், ஹாரி பாட்டர் நூல்களில் போகார்ட் என்னும் ஒரு அருவம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவன் முன் அவ்வருவம் எதிர்ப்பட்டால் ஆழ்மனதில் அவன் எதை மிகவும் அஞ்சுகிறானோ அதுவாகவே அது உருக்கொள்ளும். அபியின் பல கவிதைகளுக்கு இந்த போகார்ட் தன்மை உண்டு.

 இந்த அறையில்

வினாக்கள் விளக்கங்கள்

முற்றிலும் அற்ற

தூய்மை நிகழலாம்

                                          (இந்த அறையில்) 

இவ்வறை பல்வேறு வாசகர்களால் சவப்பெட்டியாக, பாழடைந்த வீடாக, இறந்த ஒருவரின் அறையாக அருவம் உருவம் கொள்ள காணலாம். 

(2) 

வெள்ளைவயிறு காட்டி

மிதக்கலாம்

வேறென்ன செய்ய

                                           (காலம் – நீச்சல்)

என்று முடியும் கவிதையில் வெள்ளைவயிறு காட்டிய படி காலம் என்னும் நதியில் மூழ்கி மூர்ச்சையாகும் காட்சியினால் சில நிமிடங்கள் பிரக்ஞை அச்சத்தில் சிலிர்த்து உரைவதை உணரலாம்.  

இப்படி பல கவிதைகளில் அபி அவர்கள் பயமுறுத்தவும் செய்கிறார்.

உருமாறும் அஸ்தமனங்கள்

‘The little prince’ பிரஞ்சு நாவலின் கதாநாயகனாக வரும் குட்டி இளவரசன், “சோகம் கவிழும் தருணங்களில் காணும் சூரிய அஸ்தமனம்  மிகவும் அழகானதுஎன்கிறான். அவன் வாழும் கிரகத்தில் சூரியன் ஒரே நாளில் பல முறை அஸ்தமனமாகிறது. மாலை என்னும் பொதுத்தலைப்பின் கீழ் இளவரசர் அபி எழுதியவற்றில் சூரியன் 30 கவிதைகளில் அஸ்தமிக்கிறது. பகலின் மன்றாடல்கள் “அடங்கும்” மாலை வேளைகள்,  இரவு பரிவட்டங்கள் மெல்ல உயிர் பெறும் மாலைப் பொழுதுகள் எனச் சித்தரிப்பில் வேறுபடும் அக்கவிதைகள்

இங்கே படரும் இருளைச்

சிறிது சுண்டினால் கூட

என் மலை எனக்குப் பதில்சைகை தரும்

                                                                                     (மாலை – என்மலை)

என்பன போன்ற வரிகளில் ஒரு உச்சத்தை அடைகின்றன. அவ்வாறு உருப்பெறும் காட்சியுலகம் மெல்லக் கலைந்து மௌனத்தை நோக்கிய ஒரு இசைவை வெளிப்படுத்துகிறது.

 கற்பிதங்களின்

கடையலுக்கு அப்பால்

எங்கும் நிறைகின்ற இன்மைகளோடு

ஒன்றித் தணிந்த

மாலை

                  (மாலை – எவைகளும் என்னவும்)

என்று சொல்லி அந்த கவிதை மௌனத்தை நோக்கி ஒரு சிறு இசைவை வெளிப்படுத்தி விடைபெறுகிறது.

வெள்ளை சப்தம்

whitenoise

இறுதியாக அபி அவர்களின் கவிதைகளை அடுத்தடுத்து வாசிக்க நேரும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. சமீப காலமாக மக்களால் குறிப்பாக மாணவர்களால்  YouTube இல் அதிக எண்ணிக்கையில் கேட்கப்படுவது வெள்ளை சப்தம் (white noise) அடங்கிய ஒலிப்பதிவுகள். அதில், அனைத்து அலை வரிசைகளிலான ஒலி அலைகள் முயங்கி ஒரு மெல்லிய இரைச்சலைத் தோற்றுவிக்கும், சிக்னல் பெறாத அக்கால தொலைக்காட்சிப் பெட்டிகள் போல. மனித மனம் தன்னை தன் சூழலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள, தன்னிடம் தானே உரையாடக் கூடிய நிலையை அமைத்துக் கொள்ள அவ்வொலியை நாடுகிறது. அபியின் கவிதைகளில், மௌனத்தைத் தேடி நகரும் இச்சையோடு பல்வேறு உளநிலைகளில் அணுகும் வாசகர்களின்  அலைக்கற்றைகள் முயங்கும் போது கேட்கும் ஒலியும் இம்மெல்லிய இரைச்சலே. அபி அவர்களின் வரிகளில்

தூக்கம் கலைந்து

திடுக்கிட்டெழுந்து

உட்கார்ந்தால்

இரைச்சல்கள் 

முட்டி மோதி வருவதெனக்

காணும்

விலக்கி வைத்தால்

விடுமா என்ன?

                                (குரல்கள்)

சமீப காலமாக அபி அவர்களைத் தூங்க விடாமல் படாத பாடு படுத்துவது அபியின் அபிமானிகளான நமது வாசிப்பால் உருவான இம்மெல்லிய இரைச்சலே.

Leave a comment