1776ஆம் ஆண்டு. ரோமிலிருந்து பாலினோ தா பர்தால்மோ (Paolino da San Bartolomeo) என்னும் போதகர் மலபார் வந்திறங்கினார். 1789 வரையில் இந்தியாவில் தங்கிய அவர், இந்திய மொழிகள் குறிப்பாக சமஸ்கிருதம் மீது அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார். அலெக்சாண்டர் காலகட்டத்திலேயே மேன்மை எட்டியிருந்த இந்திய கைவினைத்தொழிலாளர்களின் நகல் தயாரிக்கும் புகழைக் கேள்வியுற்று, போர்ச்சுகலில் தயாரான வேலைப்பாடு மிகுந்த விளக்கினை இந்தியக் கைவினைக் கலைஞர் ஒருவரிடம் ஒப்படைத்தார். சில நாட்களில் எது அசல், எது நகல் எனக் கண்டுபிடிக்க இயலாதவாறு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வந்த விளக்கைக் கண்டு வியப்படைந்தார். இம்மாதிரியான கலைகள் அந்நிய ஆட்சியாளர்களால் பராமரிக்கப்படாமல் வீழ்ச்சியடைகிறது என்றும், பிற இந்திய அறிவியல் சாதனைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் தனது இந்தியச் சிறுவர்களின் கல்வி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவிட்டார்.
வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டவரும் காந்தியவாதியுமான தரம்பால் 1983 இல் வெளிவந்த தனது ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) நூலின் ஆவணங்களில் ஒன்றாக பர்தால்மோவின் கட்டுரையை இணைக்கிறார். இந்நூலின் மூலம் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரால் பரவலாக்கப்பட்ட ஒரு தவறான கருத்தினை மறுதலிக்கிறார். நவீன கல்வியை அறிமுகம் செய்த பிரிட்டிஷார் இந்தியச் சமூகத்தின் கல்வியையும் ஞானத்தையும் மீட்கவில்லை. மாறாக நிர்வாகத் தேவை, வர்த்தகம், மதம் போன்ற சில சுயநல காரணங்களால் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து எந்த புரிதலும் பெருமிதமும் இல்லாத தலைமுறைகளை உருவாக்க வித்திட்டனர் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
பாரம்பரிய கல்வி முறை அழிந்ததும் கூடவே இந்திய கைவினைக் கலைகளும், அறிவியல் சாதனைகளும் புறக்கணிப்புக்குள்ளாயின. விவசாயக் கருவிகள், கப்பல் கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் தவிர்த்து கைவினைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகள் தரம்பால் ஆய்வு செய்தனவற்றுள் அவ்வளவாகத் தென்படுவதில்லை. இதற்குக் காரணமாக அவர் கருதுவது அவற்றை எழுதிய பிரிடிஷ் அரசாங்க நிர்வாகிகள், பயணிகள், மதப் பிரச்சாரகர்கள், ஆய்வறிஞர்கள் ஆகியோருக்கு இக்கலைகள் குறித்தும், இவை தலைமுறைகளாகக் கைமாற்றப்படும் முறை குறித்தும் பெரிய அக்கறை இருக்கவில்லை என்பதே. மற்றொரு காரணம் இந்தியாவில் கைவினைத் தொழில் என்பது பெரிதும் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டது, அந்தந்த ஜாதிகளுக்கு உட்பட்டது.
அக் 20, 1931 மகாத்மா காந்தி லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் ஆற்றிய நீண்ட உரையில் கடந்த 50 – 100 வருடங்களில் இந்தியப் பாரம்பரிய கல்வி அழிந்ததன் காரணமாக பிரிட்டிஷாரை நிலை நாட்டினார்.
“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்த போது, இங்கு நிலவிய அமைப்புகளைப் புரிந்துகொண்டு அதை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள். அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டு விட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது”
அந்த ‘அழகிய மரம்’ மட்கி அழியும் முன் நிலவிய கல்விச் சூழலை விளக்க, தரம்பால் அக்காலகட்டத்தில் வெளிவந்த ஏழு ஆவணங்களை நூலின் பின்னிணைப்புகளாக இணைக்கிறார். அந்த ஆவணங்களின் மூலம் 18 ஆம் நூற்றாண்டு இந்தியக் கல்வி முறை எவ்வாறு இருந்தது என்றும் அன்றைய பிரிட்டிஷ் பொதுக்கல்வி முறையை விட எப்படி மேம்பட்டு இருந்தது எனவும் தெளிவாக நிறுவுகிறார்.
தரம்பால், பிற ஆய்வாளர்கள் அதுவரை பெரிதும் கவனிக்காத ஆவணம் என மதராஸ் மாகாணத்து கவர்னர் தாமஸ் மன்ரோ 1822 இல் வெளியிட்ட அவைக்குறிப்பையும், அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட ஆய்வறிக்கைகளையும் குறிப்பிடுகிறார். “இந்தியர்களிடையே நிலவும் அறியாமை குறித்தும் அவர்களுக்குக் கல்வி வழங்குவது” குறித்தும் முடிவெடுக்க, தனது மாகாணத்தின் கீழ் வரும் பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை இந்தியப் பாரம்பரியக் கல்வி தொடர்பாக விரிவான தகவல்களைச் சேகரிக்க மன்ரோ உத்தரவிட்டார். அவர்களின் எதிர்வினைகளோ தரவுகளே இல்லாமல் யூகத்தின் பெயரில் (கனரா கலெக்ட்டர்) அனுப்பட்டவையிலிருந்து தீவிர களப்பணியால் சேகரிக்கப்பட்டவை (மதராஸ், பெல்லாரி கலெக்டர்கள்) வரை பலதரப்பட்ட நிலைகளில் வெளிவந்தன. பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் பயில்வோரின் பால், ஜாதி அடிப்படையிலான எண்ணிக்கை, வகுப்பு அட்டவணை, பயிற்றுவிக்கப்படும் மொழிகள், பயன்படுத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் எனத் தகவல்கள் கூடவும் குறையவும் அவர்களால் மன்ரோவிற்கு அனுப்பப்பட்டன.
மேல் மற்றும் இடைநிலை ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கப்பெற்றது என்று இன்றும் நம்பப்படுகிறது. ஆனால் நிலவரம் நேர்மாறாக இருந்துள்ளது. பிற ஜாதி மாணவர்கள், சூத்திர மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளிக் கல்வி பெற்றுள்ளனர். தமிழ் பேசப்படும் மதராஸ் திருநெல்வேலி, மலையாளம் பேசப்படும் மலபார், கன்னடம் பேசப்படும் பெல்லாரி, ஒரிய மொழி பேசப்படும் கஞ்சம், தெலுங்கு பேசப்படும் கடப்பா விசாகப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்களில் 40 முதல் 84 சதவீதம் வரையில் சூத்திர, பிற சாதியினரே இருந்துள்ளனர்.

கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. பெண்களில் நடனப் பெண்கள் அல்லது கோவில்களில் தேவதாசிகளாக இருந்த பெண்கள் அதிகம் கல்வி பெற்றதாகத் திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளின் கலெக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் இத்தரவுகளில் மாணவர்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி பெற்றனர் அவர்களுக்கு எவ்வாறான சலுகைகள் அளிக்கப்பட்டன போன்றவற்றிற்கான விளக்கங்களும் இடம்பெறுகின்றன. ஏழை பிராமண மாணவர்களின் கல்விக்கு அவர்கள் சமூகத்தினர் அளித்த உதவிகள் தொடர்பாகக் கடப்பா கலெக்டர் அளிக்கும் தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. பத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த இடங்களுக்குக் கல்வியின் பொருட்டு வந்து தங்கிய ஏழை சிறுவர்களின் தினசரித் தேவைகளை அவர்களின் ஆசிரியர்களும், கிராமத்தினரில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கவனித்தனர். இத்தனைக்கும் ஆசிரியர்கள் வறுமையில் உழல்பவர்களாகவே இருந்தனர். கிராமத்தினரும் மாணாக்கரிடம் எதையும் எதிர்பார்த்து உதவிகள் செய்யவில்லை. எளிய முறையில் வழங்கப்பட்ட இத்தானங்களைக் கண்ட பிரிட்டிஷரான கடப்பா கலெக்டர் , “அரசாங்கம் கொஞ்சம் போலக் கருணையுடனும் தாராள சிந்தையுடனும் நடந்துகொண்டால் இந்த அம்சத்தை நன்கு வளர்த்தெடுக்க முடியும்” என்று வரையறை மீறாத தொனியில் தன் மேலதிகாரிக்குத் தெரிவித்தார்.
மதராஸ் மாகாணத்தின் தரவுகள் தொடர்ந்து வங்காளம், பஞ்சாப் மாகாணத்தின் ஆய்வுக்குறிப்புகளிலிருந்து தொகுத்த செய்திகளை தரம்பால் முன்வைக்கிறார். 1836 – 1838 ஆண்டுகளில் வெளியான வில்லியம் ஆடம்மின் அறிக்கைகளை தரம்பால் கடுமையாக விமர்சிக்கிறார். பிரிட்டிஷ் அரசின் தலையீடு வேண்டி, இந்தியாவில் பாரம்பரியக் கல்வி விளிம்பு நிலையிலிருப்பது போல் ஒரு பிம்பத்தை ஆடம் நிறுவியதாகக் கருதுகிறார். ஆனாலும் அவர் ஆடம்மின் கடின உழைப்பையும் அவரது ஆய்வின் பரந்துபட்ட தன்மையையும் அங்கீகரிக்கத் தவறுவதில்லை.
வங்காள, பாரசீக, அரபிய ஆரம்பக் கல்வி நிலையங்களின் அவல நிலையை விளக்கும் ஆடம்மின் கட்டுரையில் மாணவர்கள் எப்படி எழுதப்பழகுகிறார்கள், அடுத்த பாடத்திற்கு எவ்வாறு முன்னகர்கிறார்கள் போன்ற தகவல்கள் கவனம் ஈர்ப்பன. கல்வி கற்க ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் மணலில் எழுத்துகளை வரைந்து பழகிக்கொள்கின்றனர். பின்னர் பனை ஓலையில் மூங்கில் பேனாக் கொண்டு எண்களை எழுதுகின்றனர். பின்னர் கணிதத்தின் அடுத்த கட்டப் பாடங்களை வாழை இலையில் வண்டி மை கொண்டு எழுதக் கற்கின்றனர்.

‘அழகிய மரம்’ அளிக்கும் பாரம்பரிய கல்விக் குறித்த சித்திரம் தத்ரூபமாக உ.வே.சாவின் வாழ்க்கை சரிதையில் காணலாம். அவரது சுயசரிதையில் ஏட்டுச்சுவடிகள் திரட்டும் பகுதித் தவிர்த்து அனைத்து பகுதிகளும் அவர் கல்விக்காக மேற்கொண்ட மெனக்கெடல்கள் பற்றியவையே. 1855 இல் பிறக்கும் உ.வே.சாமிநாதையர் ஐந்து வயதில் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்திலுள்ள ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் கல்விப்படலத்தைத் தொடங்குகிறார். அங்கே தன் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டே மாணாக்கர்களை அரிச்சுவடி, எண் சுவடி மனனம் செய்ய வைக்கிறார் உபாத்தியார் . பின்னர் வேறொரு உபாத்தியாரிடம் எழுதக் கற்றுக்கொள்கிறார். முதலில் மணலில் எழுதப் பழகிய பின் எழுத்தாணிக்கொண்டு ஓலைச்சுவடியில் எழுதப் பயில்கிறார். உபாத்தியாரின் நண்பர் ஒருவர் மாணாக்கர்களுக்கு ஆங்கில எழுத்துகள் கற்றுத் தருகிறார்.

தனது ஏழாவது பிராயத்தில் அரியலூருக்கு வரும் உ.வே.சா காமாகூஷியம்மன் கோவிலில் செயல்படும் பள்ளியில் சங்கீத வித்துவானான தந்தையின் ஆசைக்கிணங்க தெலுங்கு கற்கத் தொடங்குகிறார். தெலுங்குப் பாடங்களில் மனம் செல்லாததால் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு வீட்டிலேயே தந்தையாரிடம் சங்கீதம் பயில்கிறார். பின்னர் நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் என்றெண்ணி தில்லைக்கோவிந்தபிள்ளை என்பவரிடம் கிராமக்கணக்கும், சிதம்பரம்பிள்ளை என்னும் பண்ணையாரிடம் உதவிக்கணக்கும் பயில அனுப்பப்படுகிறார். தமிழின் மேல் உள்ள தீவிரப் பற்றால் வெவ்வேறு ஊர்களில் தங்கி வெவ்வேறு ஆசிரியர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த காவியங்களையும், இலக்கணங்களையும் கற்றறிகிறார். இறுதியாக மாயூரம் வந்தடைந்து மீனாட்சி பிள்ளையவர்களின் பிரதான சிஷ்யராகிறார். அவர் குருவின் மறைவுக்குப் பின் அவரே பிற மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கத் தொடங்குகிறார். இருபது வயதுக்குள்ளாகவே பல காவியங்களைக் கற்றுத் தேர்ந்து தமிழ் பண்டிதராகிறார்.
அன்று இசை மற்றும் பிற கலைகள் பெரும்பாலும் மகன் வழி பேணப்பட்டதால் இளம் பிராயத்திலேயே உ.வே.சா சங்கீதத்தில் பயிற்சி பெற்றவரானார். பிராமணரான உ.வே.சா பிள்ளை, ரெட்டியார் எனப் பிற வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களையும் கொண்டிருந்தார். அவரும் அவர் பெற்றோரும் கல்வியின் பொருட்டு வந்து தங்கும் கிராமங்களிலெல்லாம் அங்குள்ள கிராமத்தினர் தங்குமிடம் உணவுப் பொருட்கள் என தம்மால் இயன்ற வசதிகள் தருவித்துக் குறை ஏதும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். மீனாட்சி பிள்ளையவர்களிடம் படித்த மாணாக்கர்களில் சவேரிநாத பிள்ளை என்னும் கிறிஸ்தவரும் அடக்கம். அவர் மூத்த மாணவராக இருந்த வரையில் இளையவரான உ.வே.சா விற்கு பாடம் கற்பித்தார். உ.வே.சா மூத்த மாணவரானதும் இளைய மாணவர்களுக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்தார். இவ்வாறு உ.வே.சாவின் சரிதையில் இடம்பெற்ற பல தருணங்கள் ‘அழகிய மரம்’ நூலில் சித்தரிக்கப்பட்ட மாணாக்கர் வாழ்க்கையுடன் ஒப்பிடலாம்.
இவ்விருநூல்களும் 18-19 ஆம் நூற்றாண்டு கல்வி பற்றி நம் அறியாமையை அல்லது மேலோட்டமான அறிதலை நிவர்த்தி செய்யும் ஒப்பற்ற களஞ்சியங்கள் (காந்தியின் ‘அழகிய மரம்’ உரைக்கு மறுப்பு தெரிவித்த, எந்தவொரு விளக்கத்திற்கும் செவி மடுக்காத ஃபிலிப் ஹெர்டாக் போன்ற மேட்டிமை வாதிகளின் அறியாமையைத் தவிர).
இன்றைய இந்தியர்களின் வாழ்வு முறை, தொழில் தேர்வு மற்றும் சமூக அமைப்பு 19ஆம் நூற்றாண்டை விட மிகவும் வேறுபட்டிருப்பதால், இன்றைய பொதுக் கல்வி முறையை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டு அவ்விதமே பின்பற்ற வேண்டும் என நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் காந்தி மொழிந்த அழகிய மரத்தின் வேர்கள் சிதைக்கப்படாமல் நவீனக் கல்வி துணையுடன் பேணப்பட்டிருந்தால் இன்று ஒவ்வொரு தளிரும் அடர்ந்த நிறத்தில் முளைத்திருந்திருக்கும்.