“இது என்ன?”
“தொப்பி”
ஒவ்வொரு முறையும் இதே பதில். ஆறு வயது கதைசொல்லியிற்குப் பெரியவர்கள் அளிக்கும் இந்த விடை திருப்திகரமாக இல்லை. அவன் நினைத்தபடி அவன் வரைந்த ஓவியம் அவர்களைப் பயமுறுத்தவும் இல்லை.
கதை சொல்லி பெரியவனானான். அவனுடைய விமானம் ஆள் அருவமற்ற பாலைவனம் ஒன்றில் பழுதடைந்து விழுகிறது. எவரும் இல்லை என்று திகைத்து நிற்கும் விமானியின் முன் நம் நாயகன் குட்டி இளவரசன் எதிர்ப்படுகிறான்.
ஒரு செம்மறி ஆட்டை விமானி வரைந்து கொடுப்பானானால் அதை தன் கிரகத்திற்கு எடுத்துச் சென்று வளர்ப்பேன் என்கிறான் குட்டி இளவரசன். விமானியோ தனக்குத் தெரிந்த ஒரே ஒரு ஓவியத்தை வரைந்து கொடுக்கிறான்.
“இல்லை! இல்லை! எனக்கு யானையை விழுங்கிய மலைப்பாம்பு வேண்டாம்….எனக்கு ஒரு செம்மறி ஆடு போதும்”

ஓவியத்தைப் பார்த்த குட்டி இளவரசனுக்கு அதிர்ச்சி. குட்டி இளவரசனின் எதிர்வினையைக் கேட்ட விமானிக்கும் அதிர்ச்சி. பின்னர், இருவரும் பரஸ்பரம் கேள்விகள் கேட்டு தத்தம் கிரகங்கள் குறித்துப் பேசி தெளிவுப் பெறுகின்றனர்.

விடைகளை விடக் கேள்விகளில் அதிக நாட்டமுள்ளவனாக இருக்கிறான் குட்டி இளவரசன். விமானி, சிறு முயற்சிக்குப் பின், தான் சந்தித்த அந்நியனின் வாழ்க்கை, வசிப்பிடம் குறித்த சித்திரம் ஒன்றை உருவகித்துவிடுகிறான். அவன் சொல்லும் குட்டி இளவரசனின் கதையே “Le Petite Prince” என்னும் பிரெஞ்சு சிறார் ஆக்கம். ஐரோப்பாவில் இக்கதையை வாசித்து வளராத குழந்தைகள் இலர். நான் சிறு வயதில் இந்நாவலைப் படித்ததில்லை. படித்திருந்தால் வேறொரு வாசிப்பனுபவம் வாய்த்திருக்கும்.

எழுத்தாளர் மற்றும் போர் விமானி ஆன்ட்வான் டி சென்டெக்சூபரி (Antoine de Saint-Exupéry) எழுதி 1943ல் வெளிவந்த இந்த குறுநாவல் உலகெங்கும் 250 மொழிகளுக்கு மேல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. உளக்கொந்தளிப்புக்குள்ளான ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் சில தத்துவ சிக்கல்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் இப்படி ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும் படைப்பை எழுதியிருப்பார். குட்டி இளவரசன் விமானியிடம் பகிரும் அவதானிப்புகள் ஆழமானவை. அவன் தனது கிரகத்தில் ஒரு ரோஜா மலரை வளர்க்கிறான். அவள் பேசும் சொற்களால் காயப்பட்டாலும் அவளை மிகவும் நேசிக்கிறான்.
‘ஐந்தாயிரம் ரோஜாக்களை ஒரே தோட்டத்தில் வளர்க்க தெரிந்த மனிதர்களுக்கு, தாங்கள் தேடுவன அகப்படுவதேயில்லை. ஆனால் அந்த தேடல் முடிவடைய ஓர் ஒற்றை ரோஜா போதும்..’ தன் சக மனிதர்கள் பற்றி இளவரசன் கூறும் கருத்தை விமானியும் ஏற்கிறான்.

ஒரே நாளில் பல முறை சூரியன் அஸ்தமிக்கும் கிரகத்திலிருந்து வந்த இளவரசன், “சோகம் கவிழும் தருணங்களில் காணும் சூரிய அஸ்தமனம் மிகவும் அழகானது” என்கிறான்.
“நாற்பத்து நான்கு முறை சூரியன் அஸ்தமித்த அந்நாளில் அத்தனை சோகமாகவா இருந்தாய்?” என்னும் விமானியின் கேள்விக்கு இளவரசன் பதில் ஏதும் கூறவில்லை.

பெரியவர்கள் அனைவரும் சிறுவர்களாகத் தான் தங்கள் வாழ்வைத் தொடங்குகிறார்கள், ஆனால் அவர்களில் பலர் அதனை மறந்து விடுகிறார்கள் என்கிறார் டி சென்டெக்சூபரி. இதனால் அவர் இந்நாவலை அவரது வளர்ந்த நண்பர் லியோனிற்கு அல்லாமல் சிறு பிராயத்து லியோனிற்கு அர்ப்பணிக்கிறார். நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் பெரியவர்கள் மீதான விமர்சனம் நகைக்கவைக்கிறது. இளவரசனது கிரகத்தின் எண்களை வெளியிடும் காரணம் பெரியவர்கள் எண்களை நேசிப்பது தான் என்கிறான் விமானி. புதிய நண்பனைப் பற்றிப் பேசினால் இந்த பெரியவர்கள் அவனது குரலைப் பற்றியோ, அவனுக்குப் பிடித்த விளையாட்டைப் பற்றியோ கேட்காமல் அவனுக்கு எத்தனை வயதாகிறது? அவனுடன் கூடப் பிறந்தவர்கள் எவ்வளவு பேர்? எனக் கேள்விகள் மூலம் அவனை அறிந்துவிடலாம் என நினைக்கின்றனர்.
இந்நாவலை முடித்த தினத்தன்று, சூரியன் அஸ்தமிக்கும் நேரம், எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் அடர் பச்சையும் நீலமும் முயங்கும் மருதமலையை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சீருடையணிந்த குட்டி பெண்ணொருத்தி என்னருகே வந்து மலையைப் பார்த்து நின்றாள். வழக்கம்போல் பெயரறிந்த பின், என் நா ‘என்ன கிளாஸ் படிக்கிற?’ எனக் கேட்க எழுந்தது. பெரியவர்களின் இந்த எண் பித்தை ஒரு வினாடி எண்ணித் திகைத்த பின் என் கேள்வியை மாற்றிக்கொண்டேன். ‘உனக்கு அம்மலையைப் பிடிக்குமா?’ இவ்வாறு தொடங்கிய அந்த உரையாடல் எந்நாளும் இல்லாத ஒன்றாக அமைந்தது.
படித்தபின், என்னுள் இருந்த நீண்டநாள் ஆசை நினைவுக்கு வருகிறது.நீண்ட பாலைவனத்தில்,சூரிய அஸ்தமனத்தின் அழகை பார்க்க வேண்டும் என்று.
-ந.பரதன்
மதுரை
LikeLike