மிலராத் பாவிச்சின் புனைவுலகில் பச்சை குத்தப்பட்ட மனிதன் ஒருவன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். பைசான்டைன் பேரரசன் அறியும் பொருட்டு அவன் உடம்பெங்கும் கசார்களின் வரலாறு பச்சை குத்தப்பட்டு கான்ஸ்டண்டினோப்பிளுக்கு அனுப்பப்படுகிறான். இரண்டாம் கசார்களின் ஆண்டு குறித்த பதிவினை வாங்க நினைக்கும் ஒருவனால் அவனது இடக்கையை இழக்கிறான். பல முறை கசார் தலைநகரத்திற்கு வரலாற்றைத் திருத்தும் பொருட்டு அனுப்பவும் படுகிறான். பல மணி நேரங்கள் தொடர்ந்து நின்று, தன் முதுகிலிருந்தும், தொடையிலிருந்தும் பிரதி எடுக்கும் கிரேக்க எழுத்தர்களிடம் கூலி பெற்று தனது அன்றாடத்தை ஓட்டுகிறான். பச்சைக்குத்தப்பட்ட இடங்களில் படரும் அரிப்பு அவனை விடாது படுத்த, ஒரு கட்டத்தில் வலி தாளாமல் இறக்கிறான். இருந்தாலும் வரலாற்றின் பிடியிலிருந்து மீண்டு விட்டோம் என்ற களிப்புடன் தன் உயிரை விடுகிறான்.
பச்சை குத்தப்பட்டவைக்கு முரணாகவே பெரும்பாலும் பேசுபவனாக இருக்கும் இந்த “நடமாடும் வரலாற்றேடு” போலவே கசார்களின் வரலாற்றைக் கற்பனைக்கு ஏற்றாற்போல் மாற்றிப் பதிவு செய்கிறார் மிலராத் பாவிச்.

கசார்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் காஸ்பியன் – கறுப்புக் கடல்களுக்கு நடுவிலுள்ள நிலப்பகுதியில் வசித்த பழங்குடி இனமாக அறியப்படுகின்றனர். நாளடைவில் பிற இனங்களுடன் கலந்து தங்கள் மொழியையும் மத வழக்கங்களையும் இழக்கின்றனர். அன்றைய யுகோஸ்லாவியாவுடன் இணைந்திருந்த செர்பியாவை சேர்ந்தவர் மிலோராத் பாவிச் (Milorad Pavić). 1984 இல் கசார்களை மையமாக வைத்து அவர் எழுதிய புனைவே “கசார்களின் அகராதி” (Dictionary of the Khazars). ஒரு களஞ்சியத்தின் வடிவிற்கு நெருங்கி அமைந்திருக்கும் இப்படைப்பு, நாவல் என்று வரையறை செய்ய இயலாத வடிவில் உள்ளது.
கசார் இனத்தலைவன் ஒரு கனவு காண்கிறான். அந்த கனவின் பொருளை அறியும் பொருட்டு ஒரு விவாத அமர்வினை ஏற்பாடு செய்கிறான். ஒரு கிறுத்துவ போதகர், யூத மதகுரு மற்றும் இஸ்லாமிய போதகர் கசார் இனத்தை அவரவர் மதத்திற்கு மாற்ற எத்தனித்து அதில் கலந்து கொள்கின்றனர். சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நூல்களாக வகுக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு மதத்தின் தரப்பும் சித்தரிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்றதாகப் பதிவு செய்யப்படுகிறது. மேலும் பதினேழாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் இந்நூல்களை அகராதியாகத் தொகுக்க முனைந்தோரின் கதைகளும் அகர வரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கின்றன.

நூலின் முன்னுரையில் ஓவியம், சிற்பக்கலை போன்று வெவ்வேறு விதங்களில் அணுகக் கூடிய வகையில் தன் படைப்புகளை அமைக்க முயன்றதாகக் கூறுகிறார் பாவிச். அதன் பொருட்டே அவர் நேர்கோடற்ற கதைக்களத்தைத் தெரிவுசெய்ததாகவும் சொல்கிறார். கசார்களின் அகராதி ஆண் பிரதி பெண் பிரதியென இரு பிரதிகளாக வெளிவந்தது. ஒரு பத்தியைத் தவிர்த்து இரு பிரதிகளுக்கும் வேறுபாடு வேறொன்றுமில்லை என்றபோதும் பாவிச் இந்த வேற்றுமையை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால் படிக்கையில் உடனடி கவனம் ஈர்க்க ஒரு யுத்தியாக மட்டுமே இந்த வேறுபாடு தெரிகிறது. (நான் இரு பாலரும் இணைந்த androgynous பிரதியைப் படித்தேன்) இந்த புத்தகம் இதுவரையில் 39 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (அட்டைப் படங்கள் வினோதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காண இங்கே சொடுக்கவும்) அதன் மிக சமீபத்திய மொழிபெயர்ப்பு ஹருகி முரகாமியின் ‘கினோ’ சிறுகதைத் தொகுதியை மொழிபெயர்த்த ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு தமிழில் இவ்வாண்டு வெளிவந்துள்ளது.
வண்ணங்களை இசை பண்களாக உருவகிக்கும் ஓர் இனக்குழு, கசார்களின் மொழியைக் கற்பிக்கும் கிளிகள், உதிரும் ஒவ்வொரு முடியைக் கொண்டும் தன் எஞ்சிய வாழ்நாளைக் கணக்கிடும் சிறுவன், ஒரு கையில் இரு கட்டைவிரல்கள் கொண்ட இளவரசி, கலைச்சுவை மிக்க சாத்தான்கள் என தன் கட்டற்ற கற்பனையிற்கு வடிவம் அளித்திருக்கும் பாவிச் ஒற்றை வரி விவரணை தவிர்த்து அத்தகைய கற்பனை மூலம் தன் கதையை மேலும் செம்மையாக்கத் தவறுகிறார். உதாரணமாக பிரான்கோவிச்சின் வளர்ப்பு மகனான பெட்குகின் வருங்காலத்திலுள்ள ஒரு நாளை எடுத்து நிகழ்காலத்தில் உபயோகிக்கும் திறன் கொண்டவனாக இருக்கிறான். ஒரே நேரத்தில் இரு வேறு மொழிகளில் எழுதவும் பயிற்றுவிக்கப் படுகிறான். அவன் உதிர்க்கும் வியர்வை வானவில் வண்ணங்களாகப் படிகிறது. ஆனால் பாவிச் அவனை மையமாக வைத்து எழுதிய கதையில் இந்த அம்சங்களுக்கு இடம் அளிப்பதில்லை. அவை மேலோட்டமான விவரணைகளாகவே நின்று விடுகின்றன.
வெவ்வேறு காலக் கட்டங்களை சேர்ந்த கனவு வேட்டையர்கள், கசார்களின் அகராதியை தொகுத்து, ஆதி மனிதன் ஆதாம் காட்மானை உயிர்த்தெழச் செய்யலாம் என எண்ணுகிறார்கள். ஆதாம் பற்றிய குறிப்புகள், ஏழு வகை உப்பு குறித்த செய்திகள், வேதாகமத்தில் இடம்பெறும் சங்கீத வசனங்கள் என மதம் சார்ந்த குறியீடுகள் அகராதி முழுதும் தென்படுகின்றன. குறிப்பாக தன் கனவின் பொருளை கசார் தலைவன் கண்டடைய விழைவது, மூன்று செமிட்டிக் மதங்களின் பரிசுத்த நூல்களிலும் சித்தரிக்கப்படும் எகிப்திய அரசன் தன் கனவை யோசப் / யூசுப் துணைக் கொண்டு தெளிவுறும் காட்சியை நினைவுபடுத்துகிறது.
இந்நூலை நாங்கள் இணை வாசிப்பிற்கு தேர்வு செய்துள்ளோம் என்ற போது, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் யுகோஸ்லாவியாவின் அரசியல் பின்னணியை அறிந்து கொள்ள, இவோ ஆன்ட்ரிச் எழுதிய ‘டிரினா நதிப் பாலம் (The Bridge on the Drina – Ivo Andrić) என்கிற நாவலை பரிந்துரைக் செய்தார். யுகோஸ்லாவிய நாட்டை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்த ஆன்ட்ரிச் எழுதிய இந்நாவல் 1961 இல் நோபல் பரிசு பெற்றது. ஒரே நாட்டினர் என்றாலும் ஆன்ட்ரிச் பாஸ்னியா பகுதியில் பிறந்தவர், பாவிச் செர்பிய பகுதியை சேர்ந்தவர். மேலும் அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியவர்கள் – யுகோஸ்லாவியா இணைந்திருந்த காலக்கட்டத்தில் ஆன்ட்ரிச்சும், அந்நாடு குரோசியர் – செர்பியர் மோதல்களினால் வலுவிழந்த காலகட்டத்தில் பாவிச்சும் எழுதினர். இருவரது படைப்புகளும் செர்போ-குரோசிய மொழியில் எழுதப்பட்டவை.
ட்ரினா நதி மீது எழுப்பப்பட்ட பாலத்தின் 400 வருட வரலாற்றைப் புனைவு கலந்து கூறும் நாவல் “ட்ரினா நதிப் பாலம்”.

துருக்கியர் ஆட்சிக் காலத்தில் ட்ரினா நதிப் பாலம் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டது. நதியோரம் உள்ள விஷகிராத் கிராமத்தில் செர்பிய கிறித்துவர்கள், போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் துருக்கியர்கள் பல அரசியல் காரணங்களால் ஒன்றுபட்டும், பிளவுபட்டும் வாழ்ந்தனர். சில நூற்றாண்டுகள் கடந்து அந்நகரமும் பாலமும் ஆஸ்திரய பேரரசரின் கீழ் வந்தது. புதிய அரசு விஷகிராத் வாசிகள் ஏற்கத் தயங்கும் பல மாற்றங்களோடு நாளடைவில் அமைதியையும் தருவிக்கிறது. ஆனால் 1914 இல் ஒரு செர்பிய போராளியின் துப்பாக்கியால் ஆஸ்திரய இளவரசன் மடிய, மொத்த ஐரோப்பா போலவே பாலத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
ஆன்ட்ரிச் விஷகிராத் வாசிகளின் உணர்வுகளைக் குறிப்பாக மனித பலவீனங்களைக் குறிப்பிடும் இடங்களைக் கனிவும் இரக்கமும் நிரம்பப் பதிவு செய்கிறார். தொடர் கலவரங்களால் இடம்பெயர நேரிடுவோரின் துயர் பற்றி எழுதும் போது கூட அவர் சகோதரத்துவம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிறழ்வதில்லை. ஆனால் பாவிச்சுடைய பார்வை நேர் மாறானது. அவர் கசார்கள் தங்கள் தாயகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஒரு வித பற்றின்மையுடன் எழுதி செல்கிறார். மூன்று செமிட்டிக் மதத்தினர் பிடியில் கசார்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பிற மதத்தினரின் படைகளில் பெரும்பான்மை வகித்தாலும் அவர்கள் பெரும் பதவி வகிக்க முடிவதில்லை. விலையுயர்ந்த ரொட்டியை மட்டுமே வாங்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். வேற்றினர் அதிகம் வசிக்கும் இடங்களில் அவர்களுக்கு கசார் என்னும் அடையாளம் மறுக்கப்படுகிறது. நாவல் இறுதியில், பெரும் நாடுகளைச் சிறு நாடுகள் ஜனநாயகத்தின் பெயரில் அச்சுறுத்துகின்றன என்று அறிவிக்கிறான் இளம் கசார் கொலையாளி.
பெரும்பான்மையினரான செர்பிய மக்கள் யுகோஸ்லாவியாவில் ஒடுக்கப்படுவதை பாவிச் இவ்வாறு சுட்டியிருக்கலாம். வெளிவந்த குறுகிய காலத்தில் “கசார்களின் அகராதி” உலகளவில் கவனம் பெற்றது. அன்று யுகோஸ்லாவியாவில் நிலவிய பதற்றமான அரசியல் சூழல் அதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் அவர் பிரயோகிக்கும் உவமைகளும் உத்திகளும் அரசியல் வாசிப்பை விட இலக்கிய வாசிப்பிற்கே உகந்தது என்ற உணர்வு எனக்கு வாசித்த பின்னர் மிஞ்சியது. வெவ்வேறு விதங்களில் உரையாடக் கூடிய வகையில் தன் படைப்பு அமைய வேண்டும் என்ற பாவிச்சின் எதிர்பார்ப்பு இப்படி பலதரப்பட்ட வாசிப்பினை தூண்டுவதால் நிறைவேறுகிறது. ஆனால் இவ்வித வாசிப்பு கடின உழைப்பைக் வாசிப்போரிடம் கோருவதாகவும் இருக்கிறது.
தனி நாடாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட செர்பியாவை 1980-90 களில் உலகம் கூர்ந்து கவனித்தது. ஒடுக்கப்பட்டவர்களை கசார்களாக பாவித்து நிகழ்ந்த ஓர் அரசியல் வாசிப்பு அன்று பரவலாகியது. இதனால் செர்பியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்ற இடத்தில் பாவிச் நிறுவப்பட்டார். அந்த பிம்பம் இன்று வரையில் நீடிக்கிறது. பல பின்நவீனுத்துவ சோதனை முயற்சிகள் நினைவிலிருந்து மங்கினாலும், “கசார்களின் அகராதி” தன் புகழை இன்றும் தக்கவைத்துக் கொள்ள இதுவே காரணம்.

ஒரு செவ்வியல் ஆக்கத்திற்குரிய முழுமையோ சமநிலையோ எட்டவில்லை என்ற போதும், வடிவ ரீதியான சோதனைகள், மாறுப்பட்ட கதைக்களம் மற்றும் அறிமுகமல்லாத தொன்மங்கள் மூலம் ஒரு வினோத வாசிப்பனுபவத்தை பாவிச் அளிக்கிறார். சிறிது பிறழ்ந்தாலும் அபத்தம் என்று முத்திரை குத்தப்படும் அபாயமிருந்தும், பாவிச் தன் கற்பனையை ஜிகினா தூள் போல் “கசார்களின் அகராதி”யில் ஆங்காங்கே தூவிச் செல்கிறார். அவ்விடங்கள் மட்டும் வாசித்து முடித்த பின்னரும் மினுங்க செய்கிறது.
ஒரு முறை அவர் ஒரு மீனைப் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு பூச்சி அவரது கண்களுக்குள் விழுந்து மூழ்கியது. இதன்வழி அம்மீன் பூச்சியை உணவாக்கிக் கொண்டபோது இவ்வெளிப்பாடு அவரிடத்தில் வந்து சேர்ந்தது…
ஏறத்தாழ இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். To read the English version of this post, click here.