https://www.jeyamohan.in/125463#.XY8Ao0YzZnI
ஏப்ரல் 24, 1942. ஒரு நொண்டிக் கிழவர் கட்சி அலுவல் நிமித்தமாகத் தட்டுத் தடுமாறி ஜிலினெக் தம்பதியின் வீட்டை வந்தடைகிறார். தேநீர் பரிமாறப்படும் வேளையில் கெஸ்டப்போ காவலாளிகள் அவர்களைக் கண நேரத்தில் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்நிமிடம் அப்படையினருக்கு எத்தகைய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறதென்பது தெரியாது…
பிரஃபஸர் ஹோராக்கின் வசம் துப்பாக்கியுள்ளது. பிரயோகித்தால் அறையில் உள்ள தன் குழுவினர் மேல் கெஸ்டப்போவினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எண்ணித் தயங்கி நிற்கிறார். காவலாளிகள் பலவந்தப்படுத்தி அவரை கொண்டு செல்லும்போதும், கிழவர் எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் ஒத்துழைக்கிறார். தன் அடையாளத்தை மறைக்க வேண்டி மௌனம் காத்தாலும், பிடிபட்டவர்களில் ஒருவன் அடிக்கிணங்கி கிழவர் யாரெனக் காட்டிக் கொடுத்துவிடுகிறான். ஏக குஷியில் காவலாளிகள், எதேச்சையாய் சிக்கிய ஜூலியஸ் பூசிக்கை சிறைப்படுத்துகிறார்கள். இனி தன் எஞ்சிய நாட்களை அறை எண் 267 பான்கிராப்ட்ஸ் சிறையில் பூசிக் கழித்தாக வேண்டும்…
செக்கோஸ்லோவிய அரசு அன்று முழுவதுமாக நாஜீகள் பிடியிலிருந்தது. 1938 இல் ஒப்புக் கொண்ட முயூனிக் ஒப்பந்தப்படி ஹிட்லர் ஜெர்மானியர்கள் வசிக்கும் சூடேட்டன் பகுதியை மட்டுமே கையகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆரியர்கள் வசம் ஐரோப்பா இருக்க வேண்டும் என்கிற தீவிர வேட்கையோடிருந்த நாஜீகள் அதற்கடுத்த வருடமே போருக்கு இடங்கொடுக்காமல் செக்கோஸ்லோவியா நாடு முழுவதையும் ஆக்கிரமித்தனர். “வேற்றினர்” என அடையாளப்படுத்தப்பட்ட பிரஜைகள் அனைவரையும் அவர்கள் ஒடுக்கத்தொடங்கினர். இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டோரில் யூதர்கள் மட்டுமின்றி, நாஜீய தாயகத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் ஸ்லோவாக்கியர்கள், ஓரின சேர்க்கையாளர்கள், எதிர்த்துக் குரலெழுப்பும் கலைஞர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களும் அடங்கினர். இதில், கம்யூனிஸ்ட் கட்சியினர் நாஜீ ஆக்கிரமிப்புக்கு முன்னரே செக்கோஸ்லோவிய ஜனநாயக அரசங்கத்தால் அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்தனர்.
1921. ஜூலியஸ் பூசிக் (Julius Fučík) தனது பதினெட்டாவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் பல பத்திரிக்கைகளில் பணியாற்றினார். “ரூடே பிராவோ” (Red Right) என்னும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையிற்குத் தொடர்ந்து நாடக விமர்சனங்கள் எழுதினார். அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளால் அச்சம் கொண்ட பிராக் அரசாங்கம் அவர்கள் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது. அச்சு ஊடகங்கள் கடும் தணிக்கைக்கு உள்ளாயின. அந்நேரத்தில், பூசிக் ரூடே பிராவோவின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஒரு ஸ்டாலின் ஆதரவாளராகக் கூர்ந்து கவனிக்கப்படுபவர் என்பதனால் புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார்.

செக்கோஸ்லோவாக்கியா நாஜீ ஜெர்மனியின் கீழ் வந்த பிறகு, அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தன் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் வெவ்வேறு புனைபெயர்களில் பத்திரிகைகளுக்கு பூசிக் எழுதிக் கொண்டு தான் இருந்தார். தன் நாட்டின் பண்பாடு, வரலாறு சார்ந்து எழுதும் கட்டுரைகளில் கம்யூனிச கோட்பாடுகளை மறைமுகமாக உள்நுழைத்து நாஜீ ஒடுக்குமுறையை விமர்சித்தார். கவி, கட்டுரையாளர் யான் நெருடா மீதுள்ள ஈர்ப்பால் அவரது கவிதைகளை தன் படைப்புகளில் அடிக்கடி மேற்கோள் காட்டி எழுதினார். தோழர்களோடு சேர்ந்து அவர் ஒருங்கிணைத்த ரகசிய கூடுகைகளால் கம்யூனிஸ்ட் கட்சியின் வலு கூடியது. சில வருடங்களில் கெஸ்டப்போவின் கெடுபிடிகள் அதிகரித்தது. ரகசிய கட்சியினை முடக்க அதிதீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விளைவாக ஜெங்கா காய்கள் போல் கட்சி அமைப்பு விரைவில் சரிந்தது…
சிறையில், பூசிக் கெஸ்டப்போவினரால் வதைக்கப்பட்டாலும் தன் குழுமத்தில் உள்ளவர்களை காட்டிக்கொடுப்பதாக இல்லை. காயங்களால் நீர் குவளையை எட்ட முடியாமலும், கொலாஷின் சுவைப்பாராட்ட இயலாமலும் திகைத்துப் படுத்துக் கொண்டே பெரும்பாலும் பொழுதுகளைக் கழிக்கிறார். தொடர்ந்து வலியும் வெறுமையும் பூசிக்கை வாட்ட, தோழமை தரும் ஆறுதலாலும், கூச்சல் ஓங்கிய இசையின் துணைகொண்டும் இளைப்பாறுதல் அடைகிறார். பிறகு ஒரு நாள் கோலின் என்னும் செக் அதிகாரி, எழுதும் உபகரணங்களோடு சேர்த்து ஒரு வரத்தையும் அளிக்க முன்வருகிறார்.
“கொடுமைகளுக்குப் பிறகும் வாழக் கூடியவர்களுடன் ஒரு நொடி நேரம் பேசுவதற்கு” வாய்ப்பு கிடைத்த உத்வேகத்தில் தன் இறுதி நாட்கள் பற்றிய குறிப்பினை துண்டு காகிதங்களில் எழுதத் தொடங்குகிறார் பூசிக்.
இக்காகிதங்கள் பின்னாளில் மனைவி அகுஸ்தினா பூசிக் தொகுக்க, “தூக்குமேடைக் குறிப்பு” 1948 இல் கம்யூனிஸ்ட் செக்கோஸ்லோவாக்கியாவில் பிரசுரமாகிறது

“தூக்குமேடைக் குறிப்பு” இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. நாஜீகளின் ஆட்சியில் யூதர்கள் மீது நடந்த ஒடுக்குமுறை குறித்த சுயசரிதைகள் பெருவாரியாக அடுத்த தலைமுறையினரைச் சென்றடைய; கம்யூனிஸ்ட் கட்சியின் மறைமுக செயல்பாடுகள் மற்றும் அவர்கள் மேலிழைக்கப்பட்ட அடக்குமுறை பற்றிய அறிமுகம் அதிகம் இல்லாத காலகட்டத்தில் இந்நூல் உலகெங்கும் மொழிபெயர்க்கப்பட்டு விவாதத்திற்கு உள்ளாகிறது.

பூசிக் பான்கிராப்ட்ஸ் சிறை அறைகளுக்கு உள்ளும் புறமும் அவதிப்படும் ஆட்களை நோட்டமிடுகிறார். அவர்களைப் பற்றிய அவதானிப்பை நேர்த்தியாகப் பதிவுசெய்கிறார். சோவியத் யூனியனின் தீவிர விசுவாசியான பூசிக், தன் தாய்நாடு கம்யூனிஸ்ட் தேசமாக மாறும் சாத்தியக்கூறுகளை அலசுகிறார். பெயரிடப்படாத வீரர்களை நினைவுகூர வேண்டிய அவசியத்தை அழுந்த பதிவிடுகிறார். ஃளின்க்கை போல எதிரி குணாளனாக இருப்பின், அவனிடத்தில் அனுதாபப்படுகிறார். சக போராளியான லிடாவை வழிநடத்தச் சகாக்களிடம் வேண்டிக்கொள்கிறார். குறிப்புகளின் வழி புலப்படும் இக்கூறுகள் பின்னாளில் மக்களிடத்தில் அவரை தன்னலமற்ற போராளி என முன்னிறுத்த ஏதுவாக அமைகின்றன.
செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் 1943, பெர்லினில் பூசிக் தூக்கிலிடப்படுகிறார். சென்ற ஆண்டுடன் அவர் இறந்து 75 வருடங்களாகிறது.
அவருடைய குறிப்புகள் வெளிவந்த குறுகிய காலத்தில் ஒரு கம்யூனிச ஆளுமையாக உருவெடுக்கிறார் பூசிக். அன்று இணைந்திருந்த செக்கோஸ்லோவாக்கியா நாடு போர் முடிந்த பின் கம்யூனிஸ்ட்கள் வசமாகிறது. மக்களிடம் கம்யூனிச உணர்வுகளைக் கொண்டுசெல்ல மறைந்த பூசிக்கின் குறிப்புகள் பரவலாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், கப்பல்கள், பூங்காக்கள், பாடப் புத்தகங்கள் என அனைத்திலும் பூசிக்கின் பெயர் இடம் பெற்றது. அவருடைய பிறந்த நாள் ஊடகங்களின் தினம் என அனுசரிக்கப்பட்டதுடன் நாடு முழுவதும் அவருடைய சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

பெர்லினில் உள்ள சிலை இன்றளவும் உள்ளது. அவர் குறிப்புகளின் கடைசி வார்த்தைகள் செக், ஜெர்மன் மற்றும் ருஷ்ய மொழிகளில் சிலைக்கு இடப்புறத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
“மக்களே! உங்கள் எல்லோரையும் நான் நேசித்தேன்… உஷாராக இருங்கள்”
மனித மனம் பலவீனப்படும் தருணங்கள் குறித்த பூசிக்கின் பதிவுகளில், சித்திரவதைக்குப் பணியாத தோழர்களை மெச்சியும், மிரெக் போன்ற பயங்கொள்ளிகளைக் கண்டித்தும் எழுதுகிறார். இக்குறிப்புகளைப் படிக்கும்போது ஐயங்கள் பெரிதும் எழுவதில்லை என்றபோதும் இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை இது வெளிவந்த காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் சற்று குறைகிறது.
பிந்திய 1940 மற்றும் 50கள் ஸ்டாலினிஸம் ஐரோப்பாவில் கோலோச்சியிருந்த காலம். இந்த காலகட்டத்தில் கம்யூனிசத்திற்கு வலுசேர்க்கும் கதைகள் பெரிதுபடுத்தப்பட்டு நிகழ்ந்தவை அதற்கேற்றாற்போல் மாற்றிப் பதிவுசெய்யப்பட்டன. மாற்றுக் கருத்துக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இதனடிப்படையில் கம்யூனிஸ்ட்டுகள் பூசிக்கின் பிம்பத்திற்கு களங்கம் ஏற்படாதபடி கவனம் காத்தனர். ஜிலினிக் தம்பதி வீட்டில் கைதுக்குள்ளாகும் போது பூசிக்கின் செய்கைகள் பிறர் தப்புவதைத் தடுத்ததாக ஒருவர் சாட்சியளித்தார். இது போன்ற கருத்துகள் பரிசீலிக்கப்படாததால் பூசிக் வாழ்க்கை குறித்த ஒரு மாற்றுச் சித்திரம் இல்லாமல் ஆனது.

பூசிக்கின் குறிப்புகளில் சில பக்கங்கள் பதிப்பிக்கப்படவில்லை என்னும் செய்தி சில காலம் கழித்துப் பரவலானது. அந்த பக்கங்களில் அவர் சித்ரவதைக்குப் பணிந்து தன் சகாக்களைக் காட்டிக்கொடுத்திருக்கலாம் என்னும் யூகம் வலுத்தது. 1995 ஆம் ஆண்டு முழு குறிப்புகளும் பதிப்பிக்கப்பட்டதும் பதில்கள் கிடைத்தன. அதில் பூசிக் நாஜீகளின் வதைக்கு இணங்கியதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் அவர் காட்டிக்கொடுக்கும் நபர்களின் பெயர்கள் போலியானவை என எழுதுகிறார். முழு குறிப்புகள் வெளிவந்த பின்னரும் சிலர் சந்தேகங்கள் எழுப்பினர். சிலர் இக்குறிப்புகளை ஒரு hagiographic (தூயர் சரிதை போன்ற) படைப்பாகத் திரிக்கப்பட்டதென எண்ணினர்.
1989 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த வெல்வெட் புரட்சியோடு கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வருகிறது. அத்துடன் பல கம்யூனிஸ்ட் ஆளுமைகளுக்கு நேர்ந்தது போல் பூசிக்கின் சிலைகளும் இடமாற்றம் செய்யப்படுகிறது. கூடவே வரலாற்றில் அவருக்குரிய இடமும் மாற்றத்திற்கு உள்ளாகிறது. தேசிய போராளி என்னும் அடையாளம் கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் கருவி என மருவியதே இதற்கு காரணம். பூசிக்கின் பிம்பம் முதலாளித்துவ காலகட்டத்தில் சற்று பின்னடைவு கண்டிருந்தாலும் அசாதாரண சூழலில் மாசற்ற கனவுகள் கண்டவர் என்னும் முறையில் இன்றளவும் நினைவுகொள்ளத்தக்க ஒரு ஆளுமையாக இருக்கிறார்.
“எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே நாட்களைக் கழித்து எதிர்காலத்தை அழகுடைய தாக்கும் முயற்சியில் உயிரை விட்ட ஒவ்வொருவரும் கற்சிலையாகச் செதுக்கப்பட்ட வேண்டிய பெருமை படைத்தவர்களாவர்”
References:
- ஜூலியஸ் பூசிக். எம். இஸ்மத் பாஷா (த). தூக்கு மேடைக் குறிப்பு. பாரதி புத்தகாலயம். 2016.
- Julius Fučík. Notes from the Gallows – First printed by New Century publishers Inc, USA 1948. <https://archive.org/details/in.ernet.dli.2015.218190/page/n1>
- Arnold Suppan, Maximilian Graf (Ed.) From the Austrian Empire to Communist East Central Europe -2010. < https://books.google.co.in/books?id=RPD_5vMCRroC&source=gbs_navlinks_s>
- Gusta Fucikova. Julius Fučík. Orbis – Prague. 1955 <http://ciml.250x.com/archive/communists/fucik/julius_fucik.pdf>
2 thoughts on “சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக்”